1எம்டிபி ஊழல்களை விவரிக்கும் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கும் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேய்ர் ரியுகாசல்- பிரவுன், தம் புலனாய்வு இதழியல் வாழ்க்கையில் அதுவே மிகப் பெரிய சாதனையாக அமையும் என்று நம்புகிறார்.
“இப்போதைக்கு நான் சரவாக் ரிப்போர்டில் எழுதுவது கொஞ்சமாக இருக்கலாம் ஏனென்றால், 1எம்டிபி புலனாய்வு குறித்த நூலில் மிகப் பெரிய செய்தியைக் கூறப் போகிறேன்.
“அது செய்திக்குப் பின்னே உள்ள செய்திகளை……..இந்த ஊழலை ஏன், எப்படி ஆய்வு செய்யத் தொடங்கினேன் என்பதை விவரிக்கும். தைரியமான, துணிகரமான முயற்சிதான்”, என நேப்பாளில் நடைபெறும் ஆசிய புலனாய்வு இதழியல் மீதான மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் ரியுசாசல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சாபா, சரவாக்கின் வெட்டுமரத் தொழில் ஊழல்கள் பற்றிய செய்திகளையும் அதில் சேர்த்துக் கொள்ளப் போவதாக அந்த பிரிட்டிஷ் செய்தியாளர் கூறினார்.
அவர் நூலை விரைவாக வெளியிட விரும்பினாலும் இவ்வாண்டுக்குள் எழுதி முடிப்பது சந்தேகம்தான்.
மலேசியர்கள் நூலைப் படிப்பதற்கு வாய்ப்பிருக்குமா என்று வினவியதற்கு, இணையத்திலும் வெளியிடப்படும் என்பதால் நிச்சயம் முடியும் என்றார்