2014-இல் கிழக்கு யுக்ரேய்ன் வான்வெளியில் மலேசிய விமான நிறுவனத்தின் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்மீது விசாரணை நடத்திய அனைத்துலக சட்டக் குழு அதன் விசாரணை முடிவுகளை இன்று அறிக்கையாக வெளியிடும். ஆனால், அதில் சட்ட, அரசியல் சிக்கல்கள் காரணமாக சம்பத்துக்கு எந்தத் தரப்பும் பொறுப்பாக்கப்பட்டு குற்றம் சுமத்தப்படாது என்று தெரிகிறது.
மலேசிய விமானம் அம்ஸ்டர்டேமிலிருந்து கோலாலும்பூருக்கு பறந்து கொண்டிருந்தபோது தரையிலிருந்து- வானுக்குப் பாய்ச்சப்பட்ட ஏவுகணை ஒன்றினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 298 பேரும் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்போலோர் டச்சுக்காரர்கள்.
அது யுக்ரேய்ன் அரசாங்கப் படையினரும் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாத படையினரும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரம்.
அந்த போயிங் 777 நடுவானிலே இரண்டாக பிளந்தது. அதன் உடைந்த பகுதிகள் கிளர்ச்சிப் படையினர் வசமிருந்த பகுதியில் சிதறி விழுந்தன.
அந்தச் சம்பவத்தை ஆராய்ந்த நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், மலேசியா, யுக்ரேய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுனர் குழு , இன்று ஜிஎம்டி நேரம் 1100-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர் கூட்டத்தில் “எம்எச் 17-ஐ சுட்டுவீழ்த்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்ன அது எங்கிருந்து பாய்ச்சப்பட்டது முதலிய விவரங்கள் வெளியிடப்படும்” என ஓர் அறிக்கையில் கூறியது.