மலாய்க்காரர்கள் அரசியலில் பிளவுபட்டிருப்பது டிஏபி அரசியல் அரங்கில் கொடிகட்டி பறக்க வழிகோலும் என்று கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்த அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, இப்போது ஐந்து மலாய் அரசியல் கட்சிகள் இருப்பது அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறினார்.
“இப்படிப்பட்ட நிலைமையில் அடுத்த பொதுத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதும் நம்மை வெற்றி கொள்வதும் டிஏபிக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும் அன்றோ.
“அது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சிலர் அப்படி நினைப்பது இயல்புதான்”. சினார் ஹரியான் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெங்கு ரசாலி அவ்வாறு கூறினார்.
கிளந்தான் இளவரசரும் அம்னோ முத்த தலைவருமான அவரிடம், மலாய்க்காரர் மேன்மைக்காக அம்னோவையும் பாஸையும் ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்று வினவப்பட்டது.
முன்பு மலாய்க்காரர் அரசியல் ஆதரவை அம்னோ, பாஸ், மலாய்க்கார்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிகேஆர் மூன்றும் பகிர்ந்து கொண்டிருந்தன.
இப்போது அவர்களின் ஆதரவுக்காக மேலும் இரு கட்சிகள் போராடுகின்றன.
ஒன்று பாஸிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அமைக்கப்பட்ட பார்டி அமனா நெகாரா(அமனா). இன்னொன்று அம்னோவிலிருந்து பிரிந்து சென்ற பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து).
பிளவை அடுத்து அம்னோவும் பாஸும் நெருங்கி உறவாடுவதைப் பார்க்கிறோம். கட்சித் தலைவர்கள் நஜிப் அப்துல் ரசாக்கும் அப்துல் ஹாடி ஆவாங்கும் ஒரே மேடையைக் கூட பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், குவாங் மூசா எம்பி.யான தெங்கு ரசாலி அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் அம்னோ- பாஸ் இணைப்பை எதிர்க்கிறார்கள் என்கிறார்.
“அடிநிலை உறுப்பினர்கள் பாஸுடன் இணைவதை விரும்பவில்லை என்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் பாஸை எதிர்க்கத்தான் வேண்டியிருக்கும்.
“பாஸில் உள்ளவர்களின் நினைப்பும் அதுதான். அவர்களும் அம்னோவுடன் சேர்வதை விரும்பவில்லை”, என்றார்.
Hello Razali! Why dont you explain, how DAP is going to benefit? where else DAP contest only in chinese majority areas.