இரண்டு வாரங்களுக்கு முன் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்த அஸ்ரி முகம்மட்டின் உடல் இரண்டாவது பிணப் பரிசோதனைக்காக இன்று கோத்தா பாருவிலிருந்து கோலாலும்பூர் மருத்துவமனை(எச்கேஎல்)க்குக் கொண்டு வரப்பட்டது.
முதலாவது பரிசோதனையில் திருப்தி இல்லை என்று அஸ்ரியின் சகோதரி நோர்ஸியாஸ்மீரா முகம்மட் கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில் மனு செய்து கொண்டதை அடுத்து மறுபரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்களின் குடும்ப வழக்குரைஞர் ரவுல் லீ பாஸ்கரன் பிணப் பரிசோதனை செய்யப்போகும் மருத்துவர் குழுவைச் சந்தித்ததாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பிணப் பரிசோதனை நாளை செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
“காலையிலா வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகா என்று உறுதியாக தெரியவில்லை”, என்றார்.
அஸ்ரி போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக ஜூலை 10-இல் கைது செய்யப்பட்டு கோத்தா பாருவின் பெங்காலான் செப்பா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் அவர் கோத்தா பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு ‘கோமா’வுக்குச் சென்று முடிவில் செப்டம்பர் 14 -இல் இறந்தார் என்றும் வழக்குரைஞரும் பாடாங் செறாய் எம்பியுமான என். சுரேந்திரன் கூறினார்.
அஸ்ரியின் சகோதரிக்கு முதலாவது பிணப் பரிசோதனையில் திருப்தி இல்லை என்பதால் இரண்டாவது பரிசோதனை செய்யப்படுகிறது என சுரேந்திரன் சொன்னார். பிணப் பரிசோதனை செய்த மருத்துவர் கிருமித் தொற்று மரணத்துக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அஸ்ரி சிறையில் கடுமையாக அடிக்கப்பட்டதாக சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.