சுதந்திரமாக செயல்படும் உரிமையை இழந்து பரிதவிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைப்பது இருக்கட்டும் அதற்குமுன் இசி இழந்து நிற்கும் சுதந்திரமாக செயல்படும் உரிமையைத் திரும்பப் பெற்றுக்கொடுப்பதுதான் முக்கியம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
வியாழக்கிழமை பிகேஆர் எம்பி ரபிசி ரம்லி, கூட்டரசு அரசமைப்பில் திருத்தம் செய்து தேர்தல் ஆணையத்திடமிருந்து தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்கும் அதிகாரத்தைப் பறிப்பதற்குத் தனிநபர் சட்ட முன்வரைவு ஒன்றைக் கொண்டு வரப்போவதாகவும் அதற்கு பிஎன்னில் உள்ள மலாய்க்காரர்- அல்லாத கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவரது முன்னெடுப்பைப் பலர் ஆதரித்தாலும் அரசியல் ஆய்வாளர்கள் சிலர், தேர்தல் சீரமைப்பு என்பது தொகுதிகளைச் சீரமைக்கும் இசி-இன் அதிகாரத்தைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
அதைவிட இசி-இன் சுதந்திரமாக செயல்படும் உரிமையை நிலைநிறுத்துவது முக்கியம் என்கிறார் யுனிவர்சிடி கெபாங்சாஆன் (யுகேஎம்) மலேசிய, அனைத்துலக ஆய்வியல் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பைசல் எஸ்.ஹஸிஸ்.
“ரபிசி ஏன் அப்படிக் கூறினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது – பிஎன் அரசாங்கம் ஆட்சியில் இருப்பதற்காக இசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இசியின் அதிகாரத்தைப் பறிப்பதால் மட்டும் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விட முடியாது”, என பைசல் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அரசியல் ஆய்வாளர் கூ கே பெங், இசி தேர்தல் தொகுதி எல்லைகளைச் சீரமைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.
தேர்தல் தொகுதிகளின் எல்லை சீரமைக்கப்படுவதை மேற்பார்வை செய்வது இசி-இன் பணிகளில் அடங்கும்.
“அது பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அதுதான் பிரச்னை”, என கூ கூறினார்.
தேர்தல் தொகுதிச் சீரமைப்புக்கு நாடாளுமன்றம் ஆதாரக் கட்டமைப்பு ஒன்றை வரைவது முக்கியம் என்று கூ குறிப்பிட்டார்.
“தொகுதி எல்லைச் சீரமைப்பை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற வரையறையை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எல்லைச் சீரமைப்பு தேவையான ஒன்றுதான் என்பதால் இசி-இன் அதிகாரத்தைப் பறிப்பது தேவையில்லை”, என்றாரவர்.
இந்த விசயத்தில், ரபிசி பிஎன்னில் உள்ள மலாய்க்காரர்- அல்லாத கட்சிகளின் உதவியை மட்டும் நாடுவது போதாது என பைசல் குறிப்பிட்டார்.
“ரபிசி தம் சட்ட முன்வரைவுக்கு இரு தரப்பு அரசியல்வாதிகளின் ஆதரவுக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும்”, என்றாரவர்.
பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி, பிஎன்னில் உள்ள மலாய்க்காரர்- அல்லாத கட்சிகளின் ஆதரவை எதிர்பார்ப்பது பயனற்றது என்கிறார் மெர்டேகா மைய திட்ட இயக்குனர் இப்ராகிம் சுபியான். கட்சி அரசியலை மீறி அவர்கள் செயல்பட மாடார்கள் என்றாரவர்.
“இந்த விவகாரத்தில் அவர்கள் ரபிசியுடன் ஒத்துழைப்பதைவிட பிஎன் உறுப்பியத்தைதான் பெரிதாகக் கருதுவார்கள்”, என்றார்.
அதே கருத்தைத்தான் யுனிவர்சிடி தாஸ்மேனியாவின் ஆசியக் கழக இயக்குனர் ஜேம்ஸ் சின்னும் வெளியிட்டார்.
“அம்னோ, பிஎன் இன்றி அவற்றால் நிலைத்திருக்க முடியாது. அதனால், கட்சியைப் பின்பற்றித்தான் நடப்பார்கள். அம்னோ தோற்றால் தாங்களும் தோற்றுப்போவோம் என்ற பயம் மலாய்க்காரர்- அல்லாத கட்சிகளுக்கு உண்டு.
“அம்னோ ஆட்சியில் இருந்தால் அவை தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் அமைச்சர் பதவி கிடைக்கும். மசீசவுக்கு வென்றாலும் சரி தோற்றாலும் சரி மூன்று நான்கு அமைச்சர் பதவிகள் கிடைத்து விடுகின்றன”, என சின் கூறினார்,
ஈ சி – எப்போதும் ஆட்சியில் இருப்பவனுக்கு ஜால்றா போட்டுக்கொண்டே இருக்கும் காரணம் அப்படி ஜால்றா போடும் இனங்கள் தான் பதவியில் அமர்த்தப்படுவான்கள். விடிவு என்றுமே கிடையாது. வேறு என்ன சொல்ல– 60 ஆண்டுகள் சுதந்திரம் நமக்கு எப்படிப்பட்ட ஆட்சி கொண்டு வந்திருக்கிறது?