தேர்தல் ஆணையம் (இசி) செய்துள்ள தேர்தல் தொகுதி மறு சீரமைப்பினால் தொகுதிகளுக்கிடையிலான அளவில் காணப்படும் பெருத்த வித்தியாசம் நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு தீங்கானது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு இன்று செய்த போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
தமது கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியை மேற்கோள் காட்டிய சார்ல்ஸ், அத்தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 98,285 லிருந்து 141,275 க்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது 43.74 விழுக்காடு அதிகரிப்பாகும் என்றார்.
அதே வேளையில், சபாக் பெர்னம், சுங்கை பெசார் மற்றும் தஞ்சோங் காராங் ஆகிய தொகுதிகள் ஒவ்வொன்றிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை 50,000 க்கும் சற்று குறைவாகவே இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூர் இசி இயக்குநர் செய்துள்ள இம்முடிவால் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியின் ஒரு வாக்கின் மதிப்பை சிலாங்கூரிலுள்ள இதர நாடாளுமன்ற தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் நாடாளுமன்றத்தில் சமநிலையற்ற பிரதிநிதித்துவம் ஏற்படும் என்றாரவர்.
இது ‘ஒருவருக்கு, ஒரு வாக்கு’ என்ற கோட்பாட்டை மீறுவதாகும். இது ஒரு குற்றம், ஏனென்றால் குற்றவியல் சட்டம் செக்சன் 124(b) இன் கீழ் இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கிழைப்பதாகும் என்று சார்ல்ஸ் இன்று கிள்ளான் செலத்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தாக்கல் செய்த புகாரில் கூறியுள்ளார்.
தாம் சிலாங்கூர் இசியின் தலைவரையும் இதர அதிகாரிகளையும் சந்தித்து இவ்விவகாரம் குறித்து விவாதிக்க முயன்றதாகவும் அவர்கள் தம்மையும் இதர பிரதிநிதிகளையும் சந்திக்க மறுத்து விட்டதாகவும் சார்ல்ஸ் தெரிவித்தார்.
ஆகவே, போலீசார் சிலாங்கூர் இசியின் இயக்குநரையும் தேசிய இசியின் இயக்குநரையும் ஜனநாயக நாடாளுமன்ற முறைக்கு தீங்கிழைக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக விசாரிக்க வேண்டும் என்றார் சார்ல்ஸ்.
இது மிக முக்கியமானது, ஏனென்றால் இது கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியின் 98,285 வாக்காளர்கள் அனைவரின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டதாகும் என்றாரவர்.
என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்காது.வரும் தேர்தலில் எப்படி ஆட்சியில் நீடிப்பது என்பதற்கு இதெல்லாம் ஆரம்பம்.