எதிரணி என்னதான் சத்தமிட்டாலும் அரசியல் நிதியளிப்புமீதான புதிய சட்டங்களைத் தடுக்க முடியாது

paulஅரசியல்  நிதியளிப்புமீதான   புதிய   சட்டங்கள்   தொடர்பான   32  பரிந்துரைகளை    பக்கத்தான்  ஹராபான்    முழுமூச்சாக  எதிர்த்தாலும்   தேசிய   ஆலோசனைக்  குழு   அப்பரிந்துரைகளை    அமைச்சரவையிடம்  விரைவில்   ஒப்படைக்கும்.

“ஆமாம்.  அதைத்தான்  செய்யப்  போகிறோம்.  அதனால்  மக்களுக்கு   நன்மை   என்றுதான்  நினைக்கிறோம்”,  என   அக்குழுவின்   தலைவரும்   பிரதமர்   துறை    அமைச்சருமான    பால்   லவ்    கூறினார்.

“அவர்கள்   எதிர்த்தால்   எதிர்க்கட்டும்.  அது  அவர்களின்   விருப்பம்”,  என்றாரவர்.

அப்பரிந்துரைகள்   உண்மை   விவகாரத்திலிருந்து  கவனத்தைத்   திசை   திருப்பும்   முயற்சி   என்று   பிகேஆர்  எம்பி  ரபிசி  ரம்லியும்   தேர்தல்   செலவுக்கான   வரம்பை    நீக்குவது    பண  அரசியலைச்   சட்டப்பூர்வமாக்கும்   என்று    டிஏபி   எம்பி   அந்தோனி   லோக்கும்       கூறியிருப்பது   குறித்துக்   கருத்துரைத்தபோது    பால்  லவ்   இவ்வாறு   கூறினார்.

அரசியல்   நிதியளிப்பு    முறைப்படுத்தப்பட    வேண்டும்    என்பது   மக்களின்   விருப்பம்    என    லவ்   குறிப்பிட்டார்.

“அரசியல்   நிதியளிப்புமீது    கட்டுப்பாடுகளைக்   கொண்டிராத   ஒரு   சில    நாடுகளில்   மலேசியாவும்   ஒன்று.  அதனால்   பண   அரசியல்   பெருகியுள்ளது-  அது   ஆரோக்கியமானதல்ல.

“பண   அரசியலைத்   தடுக்க    வேண்டும்.  அதேவேளை   பண  உதவியின்றி    அரசியல்   பிரச்சாரம்    செய்யவும்    முடியாது”,  என்றாரவர்.