ஹாடி: இஸ்லாம் மட்டுமே ஆள முடியும்; மற்றவர்கள் “பாக் துருட்”

 

இஸ்லாம்தான் தலைவராகவும் ஆட்சியாளராகவும் இருந்தாக வேண்டும். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பின்பற்றுபவர்களாக (பாக் துருட்) hadipassonlyஇருக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

சமயத்தையும் அரசியலையும் வெவ்வேறாக தனிமைப்படுத்த வேண்டாம் என்று ஹாடி கூறியதாக சினார் ஹரியான் இன்று எழுதியுள்ளது.

இஸ்லாத்திற்கு முன்னுரிமையளிப்பதற்கான மாற்றங்களைச் செய்யாத போது, உங்களுடன் ஒத்துழைக்குமாறு பாஸை கேட்காதீர்கள். அது தவறு என்றாரவர்.

இஸ்லாமிய ஆட்சிமுறையின் அதிகாரம் நிலைநிறுத்தப்படாத வரையில், ஆளுபவர்கள் பாவம் மற்றும் பரிகாரம் குறித்து கவலைப்பட மாட்டார்கள், அவர்கள் மக்களின் செல்வத்தையும் மற்றவற்றையும் கொள்ளையடிப்பார்கள்.

இஸ்லாம் மட்டுமே மக்களின் நடத்தையை திருத்த முடியும். இஸ்லாத்தை நிலைநிறுத்த விருபுகிறவர்களுடன் மட்டுமே பாஸ் ஒத்துழைக்க முடியும் என்று கெமமானில் சுமார் 1,500 பேர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் ஹாடி கூறினார்.

டிஎபியை சாடினார்

ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவது பற்றிய சர்ச்சையில் டிஎபியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கடந்த ஆண்டு பாஸ் அக்கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டது.

டிஎபி பற்றி குறிப்பிட்ட ஹாடி, தாங்கள் போராடி வரும் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை அக்கட்சி திட்டவட்டமாக எதிர்க்கிறது என்றார்.

அக்கட்சியை (டிஎபியை) ஆதரிப்பவர்களும் அங்கிருக்கிறார்கள். அவர்கள் மௌனமாகவும் எந்த விதமான கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்றார் ஹாடி. இது டிஎபியுடன் நல்லுறவை கொண்டிருக்கும் பார்டி அமனா நெகாராவை குறிப்பிடுவதாகும்.