போயும் போயும் மகாதிர்தான் கிடைத்தாரா ஜனநாயகம் பாடம் நடத்த?

dahlanஒரு   காலத்தில்   முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   யாரையெல்லாம்   சிறையில்    தூக்கிப்  போட்டாரோ    அவர்கள்   அவரிடமே   சென்று     ஜனநாயகப்   பாடம்    கற்பது   வேடிக்கையாக    இருக்கிறது   என  அம்னோ  அமைச்சர்   ஒருவர்    எதிரணியினரைப்   பார்த்து    கேலி    செய்கிறார்.

“மலேசிய   வரவாற்றை   அறிந்தவர்களுக்கு   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   ஜனநாயகம்    பற்றிப்  பேசுவது   வேடிக்கையாக    இருக்கும்.

“ஆட்சியில்  இருந்தபோது      ஒரு   சர்வாதிகாரியாக   செயல்பட்டதை     அண்மையில்   அவரே    ஒப்புக்கொண்டிருக்கிறார்-   நமக்கு   அது   ஏற்கனவே    தெரிந்ததுதான்.

“அதையும்   விட   வேடிக்கையானது,   எதிரணியில்   உள்ள   டாக்டர்   மகாதிரின்   புதிய   கூட்டாளிகள்  அவரிடமே  ஜனநாயகம்   பற்றிப்  பாடம்    கற்றுக்கொள்வது.
“ஏனென்றால்,  முக்கிய   எதிரணித்   தலைவர்களான  அன்வார்   இப்ராகிம்,   லிம்   கிட்  சியாங்,   லிம்   குவான்  எங்   போன்றோர்   டாக்டர்  மகாதிர்   பிரதமராக   இருந்தபோது   சிறையிடப்பட்டவர்கள்”,எனப்   பிரதமர்   துறை   அமைச்சர்   ரஹ்மான்   டஹ்லான்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

மகாதிர்    நீதித்துறையின்  உரிமைகளுக்கும்    சட்ட   ஆளுமைக்கும்   இழைத்த   கேடுகள்    எல்லாம்  இப்போது   “சரிசெய்யப்பட்டுள்ளன”   என்றாரவர்.

“தம்   எதிரிகளை  ஒடுக்க   மகாதிர்   பயன்படுத்திய     உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்டம்(ஐஎஸ்ஏ)    முதலிய   சட்டங்களை    பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்   அகற்றினார்.

“எதிர்ப்புத்   தெரிவிக்கும்   உரிமை   முதல்முறையாக   அமைதிப்  பேரணிச்    சட்டத்தின்   மூலம்  சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது”,   என்று  கூறிய   ரஹ்மான்   டஹ்லான்  “மலேசிய   ஜனநாயகம்     கொடிகட்டிப்     பறக்கிறது. டாக்டர்   மகாதிர்   காலத்தில்  இப்படி  நடந்ததில்லை”  என்றார்.