முதுகில் குத்துவோர் அம்னோவுக்கு வேண்டாம்

ezamஅம்னோவுக்கு  முதுகில்   குத்துவோர்   தேவையில்லை    என்று   கூட்டரசு    பிரதேச   அம்னோ  இளைஞர்   தலைவர்   முகம்மட்  ரஸ்லான்    ரபி   கூறினார்.

முகம்மட்   எஸாம்   முகம்மட்  நூர்,    கட்சி  ஊழல்  ஒழிப்புக்கு    முக்கியத்துவம்   கொடுப்பதில்லை    என்பதால்    அதிலிருந்து   வெளியேறுவதாகக்   அறிவித்திருப்பதை    அடுத்து   ரஸ்லான்    இவ்வாறு   கூறினார்.

“அவர்   செனட்டாராக்கப்பட்டார்,   நிர்வாகத்தை   மேம்படுத்த   பதவியும்   கொடுக்கப்பட்டது…….ஆனால்,  அரசாங்கத்தைன்   முதுகில்   குத்தி   விட்டார்.

“அடுத்த  முறை   துரோகச்  செயல்களுக்குப்   பேர்   போனவர்களைச்    சேர்க்கக்   கூடாது.

“அவர்கள்  ஆபத்தானவர்கள்.  கூட  இருந்தே   குழிபறிப்பார்கள்”,  என்றாரவர்.

எஸாம்  1993-இல்   பெட்டாலிங்   ஜெயா   செலாத்தான்    அம்னோ  இளைஞர்   பகுதித்   தலைவராக  இருந்தார்.   பின்   துணைப்   பிரதமர்   அன்வார்   இப்ராகிமின்    அரசியல்   செயலாளரானார்.

அன்வார்  அம்னோவிலிருந்து   விலக்கப்பட்டபோது   அவரும்    விலகினார்.  ரிபோர்மாசி   இயக்கம்  நடத்தியவர்களில்    அவரும்  ஒருவர்.  அதற்காக  உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்டத்தின்கீழ்    தடுத்து   வைக்கப்பட்டார்.

அமைச்சர்   ஒருவர்   ஊழலில்   ஈடுபட்டடதாகக்   கூறப்படும்     விவகாரத்தில்    இரகசிய   ஆவணங்களை    வைத்திருந்ததற்காக    அதிகாரத்துவ   பாதுகாப்புச்   சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழும்    கைது   செய்யப்பட்டு  சிறையிடப்பட்டார்.

1999-இலிருந்து  2005வரை   பிகேஆர்    இளைஞர்   தலைவராக   இருந்தார்.  பின்னர்  அதிலிருந்து  விலகினார்.

பிரதமர்   அப்துல்லா   அஹ்மட்   படாவி    சீரமைப்பு    செய்யப்போவதாகக்   கூறியதை   நம்பி    2008-இல்   மீண்டும்  அம்னோவுக்குத்   திரும்பினார்.  2010- இலிருந்து  2014  வரை   செனட்டராக  இருந்தார்.

நஜிப்  அப்துல்  ரசாக்   பிரதமரானதும்   எஸாமை    நிதி   அமைச்சில்   தொடர்புத்துறை  இயக்குனராக்கினார்.

ஆனால்,  நஜிப்  அரசாங்கம்   உருமாற்றத்   திட்டத்தை   முறைப்படி   செய்யவில்லை   என்று  எஸாம்  குறைகூறினார்.

1எம்டிபி  மீதான  தலைமைக்  கணக்காய்வாளர்   அறிக்கையை    அரசாங்கம்   ஓஎஸ்ஏ-இன்கீழ்   இரகசிய    ஆவணமாக்கியது   “அதிகாரமீறல்”   என்று    அவர்  சாடினார்.

ஒப்பந்தக் காலம்   முடிவதற்கு  ஆறு  மாதங்கள்  இருக்கும்போதே  நிதி   அமைச்சின்   பதவியிலிருந்தும்     அம்னோ  கட்சியிலிருந்தும்   விலகிக்  கொள்வதாக   எஸாம்   நேற்று   முகநூலில்   தெரிவித்தார்.