பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து), கடந்த மாதம் தன் கட்சி ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் பேரரசருக்குமிடையில் நிகழ்ந்த சந்திப்பின்போது நடந்தது என்னவென்பதை அறிந்துகொள்ள முனையாது.
குடிமக்கள் பிரகடனம் தொடர்பில் நடைபெற்ற அச்சந்திப்பு இரகசியமானது, அவ்வாறே அது இருக்க வேண்டும் என்று பெர்சத்து உதவித் தலைவர் முக்ரிஸ் குறிப்பிட்டதாக சினார் ஹரியான் தெரிவித்தது.
“அது இரகசியமாக நடந்த ஒரு சந்திப்பு. அங்கு பேசப்பட்டதைப் பொதுவில் தெரிவிக்கக் கூடாது. அப்படியே விட்டு விட்டுவோம்.
“மாமன்னர் கூறியதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்திருப்பது சரியல்ல என்றாலும் பெர்சத்து விளக்கம் கோரப்போவதில்லை”, என முக்ரிஸ் கூறினார்.
குடிமக்கள் பிரகடனத்தில் தம்மை சம்பந்தப்படுத்திக்கொள்ள இயலாது என்பதை மகாதிருக்குத் தெளிவுபடுத்தி விட்டதாக பேரரசர் தம்மிடம் கூறினார் என்று நஜிப் கூறியிருப்பது குறித்துதான் முக்ரிஸ் அவ்வாறு கருத்துரைத்தார்.
பார்க்கப்போனால் அச்சந்திப்பு குறித்து இஸ்தானா நெகராவோ, இஸ்தானா அனாக் புக்கிட்டோ, பேரரசரின் தனிச் செயலாளரோதான் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், யாரை பற்றி விவாதிப்பதற்காக அச்சந்திப்பு நடந்ததோ அந்த நஜிப்பே அறிக்கை வெளியிட்டிருப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாரவர்.
எல்லாமே ரகசியம் தானே இங்கு?
நீங்களே கிளறிவிட்டுத் தானே செய்தியை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள்? கிளற வேண்டாம் என்றால் அதனை ரகசியமாக அல்லவா நீங்கள் வைத்திருக்க வேண்டும்!