சிவப்புச் சட்டை தலைவரை கைது செய்து குற்றம் சாட்ட வேண்டும், ஐஜிபிக்கு 32 என்ஜிஒக்கள் கோரிக்கை

arrestjamalசிவப்புச் சட்டை கூட்டத்தினரின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 32 அரசாரா அமைப்புகள் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்காரை கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த வாரம், பெர்சே 5 வாகன அணியைப் பின்தொடர்ந்து   அதில் பங்கேற்றவர்களுக்கு தொல்லை கொடுத்து, கிரிமினல் அச்சுறுத்தல் கொடுத்ததற்காக சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவருமான ஜமால் உடனடியாக கைது செய்யப்பட்டு  விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த என்ஜிஒக்கள் கூறின.

தெலுக் இந்தான் பெர்சே 5 இல் பங்கேற்றவர்களில் சிலர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். ஜமால் மற்றும் அவருடைய கூட்டத்தினரின் வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக என்ஜிஒக்கள் கூறின.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டனர். போலீசாராலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது.

ஜமாலை கைது செய்து குற்றம் சாட்டாமல் இருப்பது மலேசியா சட்ட ஆளுமையால் ஆளப்படவில்லை, மாறாக குண்டர்களால் ஆளப்படுகிறது என்ற தவறான தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்று என்ஜிஒக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.