தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பின் மீது ம.இ.கா வின் நிலை என்ன?

– டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், அக்டோபர் 7, 2016.  

Dr-Xavier-Jeyakumarமலேசியத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள சட்டமன்ற \ நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறு சீரமைப்பைக் கவனித்தால் அது தொகுதிகளின் எல்லை சீரமைப்பா அல்ல மக்களின் ஜனநாயக உரிமைகளின் சீரழிப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 இது நாட்டு மக்களின்  குறிப்பாகச் சிறுப்பான்மை மக்களின் ஜனநாயக உரிமையைத் துடைத்தொழிக்கும் வகையில் அமைந்திருப்பதால், இந்தியர்கள் மற்றும் இந்தியர்களைச் சார்ந்த அரசியல் கட்சிகள் குறிப்பாக ம.இ.கா, ம.மு.க, மற்றும் ஐ. பி.எப் போன்ற கட்சிகளும், நம் உரிமைக்கு  உரக்கக் குரல் கொடுக்க முன் வரவேண்டும் என்று கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.  

 இது இந்நாட்டு அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமை என்பதனை  அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை   இப்பொழுது கோட்டை விட்டால் பிறகு எல்லாக் காலத்திலும் நாம் கையேந்தும் சமுதாயமாக இருக்க நேரிடும். எதிர்காலச் சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிக மோசமான துரோகமாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

  தேர்தல் ஆணையத்திற்குத் தொகுதிகளை அதிகரிக்க அதிகாரமில்லை என்றால், நாட்டில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றும் அதிகாரத்தை மட்டும் எப்படிக் கையில் எடுத்துக் கொண்டதென்று கேட்டார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.   

சிலாங்கூரில் ம.இ.காவின் நாடாளுமன்ற  மற்றும் சட்ட மன்றத் தொகுதிகள் இல்லாமல் செய்வதற்கு வேலைகள் நடந்து வருகிறது. அதாவது இந்தியர்கள் பிரதிநிதிக்கும் காப்பார், கோத்தா ராஜா, சுபாங்  போன்ற நாடாளுமன்றத் தொகுதிகளும், ஸ்ரீஅண்டாலாஸ், ஈஜோக், பத்துக் கேவ்ஸ் போன்ற சட்டமன்றத் தொகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

 ஆனால், பக்காத்தானின் எல்லாக் கட்சிகளும் அதிகாரபூர்வமான ஆட்சேபணை தெரிவிக்க மக்களைத் தயார்படுத்தி வரும் இவ்வேளையில் ரோம் எரியும் போது பிடில் வாசித்த மன்னரின் கதை போல் ம.இ.கா.வின் நிலை இருப்பது வருத்தமாக இருக்கிறது.

 இதற்குப் பிரதமர் பாரிசான் கட்சிக்கு விடுத்த ரகசிய உத்தரவுக்கு இணங்க, இவ்விவகாரம் குறித்து ம.இ.கா தேர்தல் ஆணையத்திடம் அதிகாரபூர்வ ஆட்சேபணையை அளிக்காது என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா, இனி வரும் காலங்களில் வெறும் நியமனப் பதவி பொறுப்புகளுக்கு மட்டுமே இந்தியச் சமுதாயத்தைக் கையேந்தவிட முடிவு செய்துவிட்டதா என்ற கேள்விக்கு ம.இ.கா தக்க பதில்  அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   

பிரதமர்கள் பதவிக்கு வருவதும் போவதும் வழக்கமானது, தனிப்பட்ட ரீதியில் அவர் வழங்கும் உத்தரவாதமும், பதவி, விருது, சன்மானங்களுக்கான வாக்குறுதிகளும் பிரதமர் பதவியை விட்டு விலகும் போது அவர் கூடவே விலகிப் போய் விடும் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.   

ஆனால், இம்மண் உள்ளவரை நமது மக்களின் போராட்டம் இருக்கும், அவர்களின் உரிமைப் போராட்டம்    நீடிக்க, நமது சந்ததி என்றும் தலை நிமிர்ந்து நடக்க, அர்ப்பணி சன்மானங்களுக்காக, பதவிக்காக நமது உரிமைகளை  விற்றுவிடக்கூடாது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 எதிர்க்கட்சிகள்  தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகள் அல்லது மலாய்க்காரர் அல்லாத  வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதிகளில் மேலும் அதிக இந்திய, சீன வாக்காளர்களைத் திணிப்பதும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் வாக்காளர்களை அப்படியே வெளியேற்றி மற்றொரு நாடாளுமன்றச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாற்றம் செய்வதும், இன ரீதியான கண்ணோட்டத்துடன் அதனைச் செய்வதும் மிகத் தவறான வழி முறையாகும்.   

உதாரணமாகக் கிள்ளான் நாடாளுமன்றத்தில் 98,255 வாக்காளர்கள் இருந்தும் அதில் மேலும் 43 ஆயிரம் வாக்காளர்களைச் சேர்த்து 141275 வாக்காளர்களாகவும், பெட்டாலிங் ஜெயா உத்தார என்ற தொகுதிக்கு டாமன்சார என்று புதுப் பெயரிட்டு 85,401 வாக்காளர்களுடைய இத்தொகுதியில் மேலும் 65 ஆயிரம் வாக்காளர்களை இணைத்து அதனை  150,439 வாக்காளர்கள் கொண்டதாக உருவாக்குவதை எப்படி நியாயப்படுத்துவது?

 இந்தியர்கள், சீனர்கள் அதிகம் உள்ள 2 தொகுதிகளை ஒன்றாக்குவது, ஸ்ரீ அண்டாலாஸ் மற்றும் கோத்தா ஆலாம்ஷா வாழும் இந்தியப், சீன வாக்காளர்களை ஒன்றிணைத்து, இரண்டாக இருக்கும் இந்திய பிரதிநிதித்துவத்தை ஒன்றாக்குவது இதன் நோக்கமா? இவை நமது அரசியல் உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகாதா என்று கேட்டார் கேட்டார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 அப்படியானால் அம்னோ வசமுள்ள சுங்கை புசார் 42833, சபா பெர்ணம் 37126, தஞ்சோங் காராங் 42683 ஆகிய தொகுதிகளை ஒன்றாக இணைத்து ஒரே நாடாளுமன்றத் தொகுதியாக ஏன் ஆக்கவில்லை?

ம்மூன்று தொகுதிகளின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிள்ளான் மற்றும் உத்தேச டாமன்சார தொகுதிகளின் வாக்காளர்களின் எண்ணிக்கையை விடச் சிறியதுதானே என்று கேட்டார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர்.

 அம்னோ வசமுள்ள சுங்கை புசார், சபா பெர்ணம், தஞ்சோங் காசும் ஆகிய தொகுதிகளில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் கிள்ளான் மற்றும் டமான்சார தொகுதிகளில் 40ஆயிரம் முதல் 65ஆயிரம் வாக்காளர்களை மற்றத் தொகுதிகளிலிருந்து, மாற்றியுள்ளது யாருக்காக?  

 மலேசியத் தேர்தல் ஆணையம் மலாய்க்காரர்களை அதிகமாகக் கொண்ட இடங்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற   மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைவாகவே வைத்துத் தொகுதி உருவாக்குவது தெளிவாகிறது.  

தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தைக் கீழறுக்கும் செயலில் இறங்கியுள்ளது. அதன் நடவடிக்கைகள் திட்டங்கள் அம்னோவிற்கன்றி வேறுயாருக்குப் பயன் என்று கேட்டார் டாக்டர் சேவியர்.   

உலகத்தில் பல நாடுகள், சிறுபான்மை மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைத் தொடர்ந்து பேணிக் காக்க இலகுவாக அவர்களுக்குத் தனித் தொகுதிகளைத் தோற்றுவித்து வருகின்றன.  அதன் நோக்கம், எல்லாப் பிரிவினரின் குரல்களும் அந்நாட்டு நாடாளுமன்ற \ சட்டமன்றங்களில் ஒலிப்பதை உறுதி செய்வதாகும். 

தேர்தல் தொகுதி எல்லையை வகுக்கும் போது இந்தியர்கள் அதிகம் வாழும் எல்லாத் தொகுதிகளிலும், இந்தியர் தொகுதி என்று எதனையும் அடையாளப் படுத்த முடியாத வண்ணம், சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 மலேசியத் தேர்தல் ஆணையத்தின் இப்போதைய எல்லை சீரமைப்பு பரிந்துரை சிறுபான்மை மக்களின் குறிப்பாக இந்தியர்களின் வாக்குரிமை பலத்தை நீத்துப்போகச் செய்யும் நோக்குடன் தயாரிக்கப் பட்டுள்ளதற்குப்  பல உதாரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். நம்மவர்கள் நூறு பேர் கொண்ட குழுவாகவும் அவரவர் தொகுதியின் நிலையை ஆய்வு செய்து தங்கள் ஆட்சேபங்களைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கலாம் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர்.

 

 

ஓரு தொகுதியின் எல்லை ஓரப் பகுதிகளை அருகிலுள்ள தொகுதியுடன் இணைத்து புதிய தொகுதிகளை உருவாக்குவதே நடைமுறை. ஆனால் முதல் முறையாக தொகுதியின் மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களை அப்புறப்படுத்தி மற்றொரு நாடாளுமன்ற தொகுதியில் அவர்களுக்கு சட்டமன்றத் தொகுதி அமைத்துக் கொடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.