பெர்சேயின் வாகன அணிகள் நவம்பர் 19இல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பேரணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயணத்தைத் தொடர்கின்றன.
திட்டப்படி பெர்சேயின் ஆறு வாகன அணிகளும் இன்று காலை மணி 9க்குப் புறப்பட்டிருக்க வேண்டும்,
வடக்கில் கெடா, கூலிமிருந்து புறப்படும் வாகன அணி பினாங்கு ஜார்ஜ்டவுனுக்குச் செல்கிறது, ஜோகூரின் கூலாயிலிருந்து ஒரு வாகன அணி குளுவாங் செல்கிறது.
கிழக்குக் கரையில், ஒரு வாகன அணி கோத்தா பாருவிலிருந்து பகாங்கில் கேமரன் மலைக்குச் செல்லும், தெலோக் இந்தானிலிருந்து புறப்படும் வாகன அணி சிலாங்கூரில் சாபா பெர்ணம் செல்லும்.
கிழக்கு மலேசியாவில் பெர்சே வாகன அணிகள் சரவாக்கின் பிந்துலுவிலிருந்தும் சாபாவின் தாவாவிலிருந்தும் புறப்பட்டு முறையே சிபுவுக்கும் நபாவானுக்கும் பயணப்படும்.
1எம்டிபி ஊழல் குறித்து தங்குதடையற்ற விசாரணைக்கு வழிகோல பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெர்சே 5 பேரணி நடத்தப்படுகிறது.
கடந்த வாரம் பெர்சே வாகன அணிகள் சிலவற்றுக்கு அம்னோ இளைஞர்களும் ‘செஞ்சட்டை’ப் படையினரும் தொல்லை தந்தார்கள்.
லூமுட்டிலிருந்து புறப்பட்ட வாகன அணியினர், புறப்பட்ட இடத்திலேயே சிவப்புச் சட்டை அணிந்த மோட்டார் சைக்கிளோடிகள் குழு ஒன்று தங்களைத் தாக்கியதாக புகார் செய்துள்ளது. அவர்கள் தெலோக் இந்தான் சென்றடைந்தபோது அங்கும் அக்குழுவினர் வந்து தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
ஜோகூர் பாருவில் அம்னோ கட்சியினர் வாகன அணியை எதிர்க்க முற்பட்டனர். போலீசார் தலையிட்டு அவர்களைத் தடுத்தனர்.
அலோர் ஸ்டாரில் அம்னோ கட்சிச் சின்னம் பொறிக்கப்பட்ட டி-சட்டை அணிந்த கூட்டமொன்று பெர்சே வாகன அணியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தது. போலீசார் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்தனர்.
இன்று வாகன அணி சிலாங்கூருக்குள் நுழையக் கூடாது என்று அம்னோ இளைஞர் செயல்குழு உறுப்பினர் அர்மண்ட் அழா அபு ஹனிபா எச்சரித்துள்ளார்.
இன்று தெங்கு அமிர் ஷா இப்னி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சிலாங்கூர் ராஜா மூடாவாக பட்டம் சூட்டப்படுகிறார் என்றும் அதனால் இன்று பெர்சே அதன் நடவடிக்கைகளைத் தொடரக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.
பினாங்கில், கடந்த வாரம், மாநில அம்னோ இளைஞர் தலைவர் ரபிசால் அப்துல் ரஹிம் தலைமையில் ஒரு கூட்டம் பெர்சேக்கு எதிராகவும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெர்சே பினாங்கு வந்தால் அதைத் தடுத்து நிறுத்தப்போவதாக ரபிசால் சூளுரைத்துள்ளார். ஆனால், பினாங்கு செல்லும் திட்டத்தில் மாற்றமில்லை, அது திட்டப்படி நடக்கும் என்று பெர்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளது.