சாபா அம்னோ எம்பி ரேய்மி உங்கி, சாபாவில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) முன்னாள் அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டாலையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால் மற்ற அமைச்சர்களையும், ஏன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும்கூட விசாரிக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு கூறிய செகாம்புட் எம்பி லிம் லிப் எங், தெனோம் எம்பியின் கூற்று விசித்திரமாக உள்ளது என்றார். இவ்வளவு பேசும் ரேய்மி, பல்வேறு அமைச்சுகளில் ஊழல்கள் நிகழ்ந்தபோதும் பிரதமரின் மாற்றான் பிள்ளை பற்றி செய்திகள் வந்தபோதும் எங்கு போயிருந்தார் என்றவர் வினவினார்.
“எனக்குப் புரியவில்லை. ரேய்மி எங்கிருந்து திடீரென்று வந்துள்ளார்?? நேற்றுவரை வேறொரு கோளில் இருந்தாரா?”, என லிம் கேள்வி எழுப்பினார்.
2012க்கும் 2015க்குமிடையில் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சில் ரிம138 மில்லியன் அளவுக்கு ஊழல் நிகழ்ந்து அதன் தொடர்பில் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டபோது அமைச்சின் முன்னாள் இந்நாள் அமைச்சர்களான ஷபரி சிக், கைரி ஜமாலுடின் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லையே அது ஏன் என்று லிம் வினவினார்.
“ரேய்மியின் கூற்றுப்படி பார்த்தால் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி அவரின் முன்னாள் எஜமானர்களுக்குத் தெரியாமல் அவ்வளவு பெரிய தொகையைக் கையாடி இருக்க முடியாதே”, என லிம் அறிக்கை ஒன்றில் கூறினார்.
ரேய்மின் கோரிக்கையை ஏற்று எம்ஏசிசி ஷாபியை விசாரிப்பதாக இருந்தால், கோலாலும்பூர் மாகராட்சி மன்றத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் ஆணையம் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரையும் விசாரிக்க வேண்டும்.
அதேபோல், ஒரு வங்கியில் நான்காண்டுகள் இளநிலை அதிகாரி இருந்த ரிஸா அசிஸ் Red Granite Capital நிறுவனத்துக்கு யுஎஸ்$238 மில்லியன் சேர்த்தது எப்படி சொந்தத்துக்கு அமெரிக்காவில் யுஎஸ்50 பெறுமதியுள்ள சொத்து சேர்க்க முடிந்தது எப்படி என்று அவரின் தாயார் ரோஸ்மா மன்சூரையும் மாற்றான் தந்தை நஜிப்பையும் விசாரிக்க வேண்டும் என்று ரேய்மியும் மற்ற பிஎன் எம்பிகளும் கூறுவார்களா என்றும் லிம் வினவினார்.
நடக்குமா?