– எஸ். அருட்செலவம், மலேசிய சோசியலிசக் கட்சி, அக்டோபர் 9, 2016.
எ. சிவநேசன் நான் எதிர்க்கட்சியை மிரட்டுவதாக கூறியிருந்த அறிக்கையை ஒரு தமிழ் நாளிதழில் படித்து என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அரசியலில் இத்தனை சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வேறு எவராலும் கொடுக்க இயலாது.
என்னைப் பற்றியும், நான் சார்ந்திருக்கும் பிஎஸ்எம் கட்சி மற்றும் சுங்கை சிப்புட் தொகுதி விவகாரம் பற்றியும் அவரது அறிக்கையில் சிவநேசன் விமர்சித்திருந்த வேளையில் அதன் உண்மையை விவரிக்க வேண்டியது எங்களின் கடமை. உண்மை நிலையை அறிந்திருக்காத சிவநேசன் வாய்க்கு வந்ததைப் பேசி, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்.
பிஎஸ்எம் கட்சி மலேசிய அரசியலில் பிழைப்பிற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அல்ல. அஃது ஓர் உன்னத கொள்கையுள்ள கட்சி. அதை அரசியல் இலாபத்திற்காக கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தேர்தலின் போது, எங்கள் கட்சி இன்னும் பதிவு பெறாத நிலையில் எங்களின் கை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அச்சூழலில்தான் எதிர்க்கட்சியிடம் அவர்களின் சின்னத்தை இரவல் தரும்படியும் அதற்கும் சில ஒப்பந்தங்களையும் போட்டோம். அப்போது ஜ.செ.க கட்சி எங்களுக்கு அவர்களின் சின்னத்தை இரவல் தந்தது. அதே வேளையில், ஒருகால் தேர்தலில் நாம் வெற்றிகொள்ளும் சூழ்நிலை நடந்தால், அதனைத் தொடந்து வரும் காலங்களில் எங்கள் கட்சி பதிவுபெற்றால், நாங்கள் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எங்கள் கட்சியை பிரதிநிதித்துதான் இயங்குவோம் என்று தெளிவாக கூறினோம். இந்த ஒப்பந்தத்தை ஜ.செ.க கட்சியின் மூத்த தலைவர்களான லிம் கிட் சியாங் மற்றும் கர்ப்பால் சிங் நன்கு அறிவர். இது சிவநேசனுக்கு தெரியாமல் இருக்கலாம். நாங்கள் இந்த தொகுதியில் நிற்பதற்கு முன், ஜ.செ.க இந்த தொகுதியில் பல முறை நின்று தோல்வியுற்றுள்ளனர் என்பதை சிவநேசனும் அறிவார்.
ஆக, 1999 இல், நாங்கள் ஜ.செ.க கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோம். பின்பு, 2004-ஆம் ஆண்டில் டாக்டர் ஜெயக்குமார் ஜ.செ.க சின்னத்தில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட வேண்டுமாயின் அவர் ஜ.செ.க கட்சிஉறுப்பினராக வேண்டும் என அக்கட்சி நிபந்தனையிட்டது. அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார் டாக்டர் ஜெயக்குமார். ஆனால், அச்சமயத்திலும் பி.எஸ்.எம் கட்சி பதிவு பெறாத சூழ்நிலையில், பி.கே.ஆர் கட்சி சின்னத்தின் கீழ் போட்டியிட்டார் பி.எஸ்.எம் உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார். இதை ஏற்றுக் கொள்ளமுடியாத ஜ.செ.க, அதன் வேட்பாளரையும் சுங்கை சிப்புட் தொகுதியில் நிறுத்தியது. அச்சூழலில்தான் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. மேலும், ஜாலோங் தொகுதியில் பி.எஸ்.எம் கட்சியைச் சார்ந்த சேகர் போட்டியிட்டார். அந்தத் தொகுதியிலும் ஜ.செ.க வேட்பாளரை நிறுத்தியது. இந்த இரண்டு தொகுதிகளிலும் சரித்திரத்திலே காணாத தோல்வியை ஜ.செ.க எதிர்நோக்கியது. சுங்கை சிப்புட்டில் வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி கண்டது. ஜாலோங் தொகுதியில் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டது. பி.கே.ஆர் சின்னத்தில் போட்டியிட்ட பி.எஸ்.எம் இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாவது நிலையில் தனித்துவம் பெற்றது.
இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், இறுதியாக சுங்கை சிப்புட்டில் ம.இ.கா-வின் கோட்டையை தரைமட்டமாக்கினார் டாக்டர் ஜெயக்குமார். சாமிவேலுவின் அரசியல் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த வெற்றியில் பல கட்சிகளுக்கு பங்குண்டு, ஹிண்ட்ராஃப் உட்பட. தனக்கென்று அரசியலில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருந்த சாமிவேலுவை சாதாரண ஒருவரால் சாய்த்திருக்க முடியுமா? அத்தகைய தகுதி பெற்ற டாக்டர் ஜெயக்குமார், பி.எஸ்.எம் வேட்பாளராக அத்தொகுதியை வென்றெடுத்து இன்றுவரை மக்களுக்கு அயராது உழைத்து வருகிறார். ஆனால், இன்று யார் யாரோ அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூப்பாடு போட்டு வருகின்றனர். இதைத் தட்டிக்கேட்டால், மிரட்டுகிறோம் என்று சிவநேசன் கூறுகிறார். நியாயத்தை கேட்கும் கட்சியை சார்ந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு பூசிமெழுகத் தெரியாது என்பதை சிவநேசனுக்கு நினைவுறுத்த வேண்டியுள்ளது.
தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ம.இ.கா-வின் மற்றுமொரு அரசியல் தலைவரான தேவமணியை தோற்கடித்து சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் காப்பாற்றினார் டாக்டர் ஜெயக்குமார். மேலும், நாடாளுமன்றத்தில் நன்கு சிந்தித்து பேசக்கூடிய ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களில் டாக்டர் ஜெயக்குமாரும் ஒருவர் என்ற அங்கீகாரத்தை பாரிசான் சபாநயகரே புகழ்ந்து கூறியிருந்தார். இதை நாம் அறிவோம், சிவநேசனும் அறிவார். இதையெல்லாம் தாண்டி, இந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும்தான் ஒவ்வொரு வருடமும் தவறாது தமது சொத்துக்களை பொதுமக்களுக்கு அறிவித்தும் வருகிறார்.
ஆக, சிவநேசன் தனது இஷ்டத்திற்கு பத்திரிக்கையில் அறிக்கை கொடுத்து, மக்களை திசைதிருப்புவதை நிறுத்த வேண்டும். பி.எஸ்.எம் போன்ற சிறிய கட்சி எப்படி ஜ.செ.க-விற்கு மிரட்டல் கொடுக்க முடியும் என்பதை படிக்கும் போதே சிரிக்க வைக்கிறார் சிவநேசன்.
எனவே, இப்போது காலம் மாறி வருகிறது. சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கும் காலம் இது. எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு தொகுதியில் நின்று தேர்தல் முடிந்ததும் மக்களை தத்தளிக்கவிட்டுப் போவதை மக்களும் ஆதரிக்க போவதில்லை, நாங்களும் அதை ஆதரிக்கவில்லை.
பி.எஸ்.எம் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் மட்டும்தான் போட்டியிட்டது. இந்த நான்கு தொகுதிகளும் நாங்கள் பல காலமாக மக்களுக்காக சேவை செய்து வரும் தொகுதிகள். நாங்கள் தேர்தல் சமயத்தில் குதிக்கும் வான்குடை வேட்பாளர்கள் அல்ல. இந்த நான்கு தொகுதிகளில், இரு தொகுதியில் எதிர்கட்சியும் அவர்களது வேட்பாளாரை நிறுத்தியதால் பன்முனைப் போட்டிகளாக மாறியது. இருப்பினும், நாங்கள் போட்டியிட்ட தொகுதியைத் தவிர்த்து, மற்ற தொகுதியில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகத்தான் பிரச்சாரம் செய்தார்கள், வாக்கும் போட்டார்கள். நாங்கள் நியாயமாக நடந்துகொண்டதால்தான் மக்கள் இன்றும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆனால், இன்று எதிர்கட்சிகளின் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. சமீபகாலத்தில் நடந்த பல இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்குள்ளே மோதல்கள் நடந்தன. எதிர்கட்சிக்குள்ளயே ஒரு தொகுதியில் இருவர் போட்டியிட இதனால் மக்கள் எதிர்கட்சியின் மீது கடும் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். இருந்தபோதும், இந்த சமயத்திலும் பி.எஸ்.எம் மட்டுமே அனைத்து எதிர்கட்சிகளும் ஒரு குடைக்குள் இணைய வேண்டும், தேர்தலில் ஒரு சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இதுவே மக்களின் விருப்பமும் கூட.
இவ்வளவு முக்கிய பிரச்சனையை வைத்துக் கொண்டு, அதற்கு எப்படி தீர்வு காண்பது என யோசிக்காமல், சிவநேசன் போன்ற அரசியல்வாதிகள் தொகுதிகளை குத்தகையெடுப்பதையே முழுநேர வேலையாக செய்து வருகின்றனர்.
சுங்கை சிப்புட் தொகுதியைப் பற்றி நாங்கள் பேசினோம், ஏனென்றால் அங்கே நாங்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். ஆனால், இதனால் சிவநேசனுக்கு இத்தனை கோபம் வருவதற்கு என்ன காரணம் என பார்த்தால், அவரும் அத்தொகுதியில் நிற்கப் போவதாக எங்களுக்குத் தெரிய வந்தது. அது உண்மையா என அவர்தான் உறுதிப்படுத்த வேண்டும். அப்படியானால், இப்போது ஜ.செ.க மற்றும் பி,கே,ஆர் ஆகிய இரு கட்சிகளும் சுங்கை சிப்புட் தொகுதிக்கு அடித்துக் கொள்ள தயாராகி விட்டன போல் தெரிகிறது. ஒரு சமயத்தில் தோல்வியை மட்டுமே தந்த தொகுதி, இன்று டாக்டர் ஜெயக்குமார் போன்றவர்களின் அயராத உழைப்பால் வெற்றியை அள்ளிக் கொடுக்கும் தொகுதியாக மாறியுள்ளதால் இத்தொகுதில் போட்டி நிலவத் தொடங்கியுள்ளது. அடுத்தவன் போட்ட விதையில் முளைத்த மாங்காயை ருசிக்க எத்தனை ஆர்வம் இவர்களுக்கு!
எனினும், சிவநேசனின் பத்திரிக்கை அறிக்கையை நம்பி நாங்கள் அரசியல் நடத்தவில்லை. மலேசிய மக்களுக்கு தெரியும் நான் யார், பி.எஸ்.எம் என்ன செய்து வருகின்றது என்பது. எங்கள் போராட்ட வரலாற்றை மக்கள் அறிவர். மக்கள்தான் எங்களின் பலம். பத்திரிக்கை விளம்பரம் செய்து அரசியல் வளர்ப்பது எங்களது கலாச்சாரம் இல்லை. அது சேவை என்பது என்னவென்றே தெரியாதவர்களின் கலாச்சாரம்.
தம்பி அருட்செல்வம், சிவநேசன் ஒரு அருமையான குடிகாரர். இரவு எட்டு மணிக்கு மேல் அவரது கைகள் ஆட தொடங்கிவிடும். அதற்கு பின் அவரை பாரில்[Bar] பார்க்கலாம். இவரை டாக்டர் ஜெயக்குமாரோடு ஒப்பிட்டு, அவரது நிலையை கீழ்ப்படுத்த முயற்சிக்கும் உங்களது வாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிவநேசன் ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதி, அவரை விமர்சிப்பதை தயவு செய்து விடுங்கள்.
சிவா சிவா என்று தலையில் கொட்டிட வேண்டும் போல் உள்ளது. சிவா ஒரு காமடி மனிதர் அவரை அவசப்பட்டு எதுவும் பேசி விடாதீர்கள். சில வேளைகளில் நகைசுவையம் வேண்டும். அடிக்கடி எதாவது உளறிவிடு அப்புறம் நான் அப்படி சொல்ல வில்லை என்பார். அடுத்த முறை அவரை உற்று பாருங்கள் சிரிப்புதான் வரும் 🙂