பினாங்கில் பெர்சே 5 தொடக்கவிழா சிகப்புச் சட்டையினர் தொல்லையின்றி நடந்தது

bersihஇன்று  பினாங்கில்  பெர்சே   5  தொடக்கவிழா   அமைதியான   முறையில்   நடந்தேறியது.  பெர்சே  நிகழ்வுகளுக்கு    எதிர்ப்புத்    தெரிவிக்கும்   அரசாங்க- ஆதரவு   சிகப்புச்   சட்டை  இயக்கத்தினர்   எவரும்  அங்கு   காணப்படவில்லை.

இதனால்  மிகவும்  திருப்தியுற்றவராகக்   காணப்பட்ட    முதலமைச்சர்   லிம்   குவான்   எங், “நாங்கள்   பிரச்னைகளை   விரும்பவில்லை.  தூய்மையான    தேர்தல்கள்   தேவை    என்ற    எங்களின்   கோரிக்கைகளை    அமைதியான   முறையில்     முன்வைக்க   விரும்புகிறோம்”,  என்றார்.

லிம்முடன்    பெர்சே    தலைவர்    மரியா  சின்   அப்துல்லா,   பினாங்கு   டிஏபி    தலைவர்   செள   கொன்   இயோ,    புக்கிட்   மெர்தாஜாம்   எம்பி   ஸ்டீபன்   சிம்    முதலானோரும்    அந்நிகழ்வில்   கலந்து  கொண்டனர்.

லிம்,  தமதுரையில்    பெர்சே    பேரணிகளுக்கு    எதிராக  அம்னோ,   குறிப்பாக   சிலாங்கூரில்   வன்முறையையும்    குண்டர்தனத்தையும்    கட்டவிழ்த்து    விட்டிருப்பதாக    சாடினார்.

“அவர்கள்    மக்களை   அடித்துக்  காயப்படுத்துகிறார்கள்.  அனால்,  அவர்களுக்கு   எதிராக     நடவடிக்கை   எடுக்கப்படுவதில்லை”,  என்றவர்   குறிப்பிட்டார்.

பினாங்கு     நகர   மண்டபத்தில்    நடைபெற்ற    பெர்சே   5  தொடக்கவிழாவில்    பெர்சே   ஜோதி     லிம்மிடம்   வழங்கப்பட்டது.