ஒரு கட்சிக்குச் சாதகமான வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும், குலா

 

kulaதேர்தல் ஆணையம் முன்மொழிந்திருக்கும் தேர்தல் தொகுதி சீர்திருத்தத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் மனுவை ஈப்போ பாரட் நாடாளுமன்ற தொகுதி டிஎபி உறுப்பினர்கள் இன்று ஈப்போவில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.

ஆணையத்தின் முன்மொழிதலுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வெறும் 100 வாக்காளர்களே போதும் என்ற போதிலும், கடந்த சில வாரங்களில் சில நூற்றுக்கணக்கான வாக்காளர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டன என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார்.

தேர்தல் ஆணையத்தின் முன்மொழிதல்களை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான காரணங்கள் ஆட்சேபக் கடிதத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக குலா மேலும் கூறினார்.

சுருக்கமாக, கூடுதலாக குறைந்தபட்சம் 2 நாடாளுமன்ற இருக்கைகளும், தம்பூன், ஈப்போ பாரட் மற்றும் ஈப்போ திமோர் ஆகிய நாடாளுமன்ற இடங்களில் கூடுதலாக 4 சட்டமன்ற தொகுதிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாகும்.

மேலும், ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாடு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்பதோடு தகாத முறையில் ஒரு கட்சிக்கு சாதகமான வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக குலா தெரிவித்தார்.

மூன்று எதிர்ப்பு மனுக்கள் மட்டுமே!

இன்று வரையில் 3 முறையான ஆட்சேப மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்று கூறிய குலா, அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு சாரா அமைப்புகளும் தங்களுடைய ஆட்சேபனைகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆட்சேப மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கான இறுதி நாள் அக்டோபர் 14 ஆகும் என்பதை குலா நினைவுறுத்தினார்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேப மனுக்கள் மீதான முறையான விசாரணை 2016 நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஈப்போவில் நடைபெறும் என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக குலசேகரன் கூறினார்.