பாஸ்: பட்ஜெட் தொடர்பில் நஜிப் கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் நம்பத்தக்கதாக இல்லை

pasஎன்னதான்    பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   2017  பட்ஜெட்டில்  மக்களுக்கு    நிறைய   உதவிகளும்   நன்மைகளும்    உண்டு     என்று   கூறினாலும்   மலேசியர்கள்   அதை   நம்ப   மாட்டார்கள்   என்கிறது  பாஸ்.

“அவர்  பேசுவது   கேட்பதற்கு    இனிமையாக  உள்ளது.  ஆனால்,  அதை  மக்கள்  நம்புவது   கடினம்”,  என  பாஸ்    துணைத்    தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்  மான்   கூறினார்.

ரிங்கிட்   பலவீனமாக  இருக்கிறது,  பெட்ரோனாசும்   பல   சிரமங்களை   எதிர்நோக்குகிறது    என்பதுடன்   அம்னோ   ஆட்சியில்    ஊடுருவிக்  கிடக்கும்    ஊழலால்   நாடே    மிரட்டலை   எதிர்நோக்குகிறது     என   துவான்   இப்ராகிம்   குறிப்பிட்டார்.

சாபா   நீரளிப்புத்துறை    ஊழல்    தொடர்பில்    கைப்பற்றப்பட்டிருக்கும்  ரிம114.5 மில்லியனை   அடிப்படையாக   வைத்து    அவர்   இவ்வாறு   கூறினார்.

கைது   செய்யப்பட்ட    இருவரும்  ‘சிறிய  மீன்கள்’தாம்   என்று   பலரும்  கூறுவதாக    அவர்  சொன்னார்.

“பெரிய  சுறாமீன்கள்   சிக்கினால்   எவ்வளவு  பணத்தை    மீளப்  பெறலாம்   என்பதைக்   கற்பனை   செய்து    பாருங்கள்”,  என்றாரவர்.