மகாதிர்: என்னை நசுக்க வெறிபிடித்து அலையும் நஜிப் எனது சமையல்காரர் தலையில் கைவைக்கிறார்

 

Najibdesperateதமது மனோதிடத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் தாம் உண்ணும் உணவுக்கு பலத்த அடி கொடுக்கப் பார்க்கிறார் என்று பிரதமர் நஜிப் மீது குற்றம் சாட்டுகிறார் முன்னாள் பிரதமர் மகாதிர்.

அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை எப்படி அரசாங்கம் மீட்டுக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டிய மகாதிர், இப்போது அவரது அதிகாரியையும் சமையல்காரரையும் மாற்றும் ஒரு திட்டம் இருக்கிறது என்றார்.

அவருக்குப் பழக்கமானவர்கள், குறிப்பாக வாணிகத்துறையைச் சேர்ந்தவர்கள், வருமான வரி இலாகாவால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று கூறிய அவர், அவர்கள் வரி செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என்று தமது வலைப்பதிவில் கூறுகிறார்.

புரோட்டன் கார் தொழிற்சாலையில் அவருக்குப் பழக்கமானவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு அவருடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் எவரும் புரோட்டன் கார் உற்பத்தியாளருடன் வணிகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் மகாதிர் கூறியுள்ளார்.

புரோட்டன் நொடித்துப் போக வேண்டும் என்பது நஜிப்பின் நோக்கம். அப்போதுதான் அதை அற்பவிலைக்கு விற்க முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

புரோட்டனை ஒட்டுமொத்தமாக அந்நியரிடம் விற்கும் திட்டம் இருக்கிறது என்றும் அதன் வழி தேசிய கார் தொழிலை முற்றாக ஒழித்து விட முடியும். “இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மட்டுமே மலேசியாவில் விற்பனை செய்ய முடியும்”, என்றாரவர்.

தம்மால் உருவாக்கப்பட்ட எதுவும் இருக்கக்கூடாது. நஜிப்பின் திருப்திக்காக உள்நாட்டு தொழில் அழிக்கப்பட வேண்டும் என்று மகாதிர் கூறினார்.

மேலும், மகாதிரின் புதிய கட்சி பெர்சத்துவில் சேருவதற்காக பாரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அரசாங்கத்தாலும் அம்னோவாலும் மிரட்டப்படுவதாகவும் மகாதிர் கூறினார்.

மக்கள் பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக கூறிய மகாதிர், அவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல் பெர்சத்துவில் சேர்ந்து அடுத்தப் பொதுத்தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களிக்க விரும்புகின்றனர் என்றார்.

மலேசியாவில் பலர் அரசாங்கத்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவோம் என்று அஞ்சுகின்றனர். “அது நஜிப்பின் ஜனநாயகம்”, என்றார் மகாதிர்.