போலீஸ் உத்தரவிட்டும் கலைந்து செல்லாமல் ஜிஎஸ்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 73பேரை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. ஆனால், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு எம்பிகளும் இருந்தனர்- டாக்டர் டி.ஜெயகுமாரும் (சுங்கை சிப்புட்), டாக்டர் முகம்மட் ஹட்டா ரம்லியும்(கோலா கிராய்).
குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் குழுவின் தலைவர் கோபிந்த் சிங் டியோ, வழக்கிலிருந்து மட்டுமல்லாமல் குற்றச்சாட்டிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இல்லையேல் குற்றச்சாட்டு “தலைக்குயரே தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்” என்றார்.
ஆனால் அரசுத்தரப்பு வழக்குரைஞர் ஷாபிக் ஹஷிம், குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்காமல்
வழக்கிலிருந்து விடுவிக்கச் சொல்லித்தான் தமக்கு உத்தரவு என்றார்.
அவர் கூறியதை ஏற்று செஷன்ஸ் நீதிபதி அஜானிஸ் தே அஸ்மான் அவ்வாறே தீர்ப்பளித்தார். அவர்களின் பிணைப்பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறும் உத்தரவிட்டார்.