நாமென்ன தாலிபான்களா? ரபிடா சீற்றம்

rafidahமுன்னாள்   தலைவர்கள்   விட்டுச்  சென்றுள்ளதை    எல்லாம்   அழிக்க   நினைப்பது   மலேசியாவை  தாலிபான்   நாடாக   மாற்றி   விடும்     என்று   காட்டமாகச்   சாடியுள்ளார்    முன்னாள்   அமைச்சர்  ஒருவர்.

“ஒரு  முன்னாள்    தலைவரின்    சாதனைகளை    அழிக்க   விரும்பினால்     அரசாங்கம்     இரட்டைக்  கோபுரத்தைக் கூட   இடித்துத்   தள்ளியிருக்கும்   என்று    ஒருவர்   கூறினாராமே.

“நான்  கேள்விப்பட்டது     சரிதானா?”,  என  முன்னாள்   வாணிக,  தொழில்  அமைச்சர்   ரபிடா  இஸ்மாயில்     முகநூலில்   வினவினார்.

அரசாங்கம்   முன்னாள்   பிரதமர்    டாக்டர்    மகாதிர்   முகம்மட்    விட்டுசென்றதை    அழிக்க  விரும்பியிருந்தால்     கேஎல்சிசி-யையே   உடைத்துத்   தரைமட்டமாக்கி  இருக்கும்   என்று    தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்     சாலே  சைட்   கெருவாக்   கூறியிருந்தது   குறித்து  ரபிடா   முகநூலில்   கருத்துரைத்தார்.

அப்படிச்   செய்வதற்கு   மலேசியா      அல்-கைடாவா   அல்லது  தாலிபானா     என்றவர்    சாடினார்.

“நாமென்ன  ஒசாமா  பின்   லாடனை(காலஞ்சென்ற   அல்-கைடா   தலைவர்)யும்   தாலிபானையுமா   பின்பற்றுகிறோம்?

“அதிகாரத்தில்  உள்ளவர்களுக்கு,     முன்னவர்கள்   விட்டுச்   சென்ற  சொத்துகள்,  நம்   கடந்த   காலம்,   நம்  வரலாறு  எல்லாமே  மதிப்பிழந்து   போய்விட்டனவா?”,  என்றவர்    வினவினார்.

இரட்டைக்   கோபுரம்    மகாதிரின்    தனிப்பட்ட   சொத்தல்ல,  அது    நாம்  விரைவாக   வளர்ந்து   வரும்    நாடு   என்பதைப்   பறைசாற்றும்   அப்போதைய    அரசாங்கத்தின்,    அப்போதைய   மலேசியாவின்   சொத்து  என்றாரவர்.