ஆரம்ப தமிழ்க்கல்வி நமது உரிமையாக்கப்பட்டுள்ளது – தமிழ் அறவாரியம் பிரகடனம்

tf1மலேசிய வரலாற்றில் 200 ஆண்டுகால வரலாற்றை பெற்றுள்ள ஆரம்ப தமிழ்க்கல்வியானது தற்போது அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்ட நிலையில் ஆளுமை பெற்று உரிமை நிலையாக்கப்பட்டுள்ளது என்கிறது தமிழ் அறவாரியம்.

கடந்த பதிமூன்று ஆண்டுகால தமிழ் அறவாரியத்தின் ஈடுபாடும் போராட்டமும் அதோடு சமூகத்தின் வழி கொண்ட உறவும் அரசாங்கத்தின் அங்கீகாரமும் உரிமை உணர்வு நிலைக்கு வித்திட்டுள்ளதாக அதன் தலைவர் இராகவன் அண்ணாமலை அறிவித்தார்.

நேற்று மிட்லண்ஸ் மாநாட்டு மையத்தில் தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்திருந்த 200 ஆண்டு தமிழ்க்கல்வி விழா விருந்து நிகழ்ச்சியில் கொள்கை உரையாற்றிய இராகவன் இதனை விவரித்தார்.  நாடு தழுவிய அளவில் இருந்து வந்த பலர் பங்கேற்ற இவ்விழாவில் ஜிபி எம்  என்ற  தேசிய சமூகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் இக்ராம் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ragavan1சீனமொழிப்பள்ளிகளுக்கும் சீன சமூகத்திற்கும் இடையில் நிலவும் உளமார்ந்த, உணர்வார்ந்த உறவைப் போல் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இடையில் உறவை வளர்க்கும் திட்டத்தை தமிழ் அறவாரியம் மேற்கொண்டுள்ளது. இதற்கு ஆணிவேராக தமிழ்ப்பள்ளிகள், அப்பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து செயல்படும் திட்டம் அமலாக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ் அறவாரியம் தமிழ்க்கல்வியின் வளர்ச்சியில், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் தீவிர அக்கறை கொண்டவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டில் பதிவு பெற்றது.

ஓர் அரசு சார்பற்ற அமைப்பாக தமிழ் அறவாரியம் இன்றுவரையில் கொள்கைப்பிடிப்புடனும் துடிப்பாகவும் செயல்பட்டு வருவதற்காக அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறார்கள். பல திட்டங்கள் வழி கல்வி மேம்பாட்டுக்காக  தமிழ் அறவாரியம் செயல்பட்டு வருவதை விளக்கிய இராகவன், தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மைக்கும் அதன் உரிமைக்கும் அத்தியாவசியமான  உள்ளுணர்வு விழிப்புணர்ச்சியை சமூகம் அடைந்துள்ளதாக கோடி காட்டினார்.

pathi2இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான பசுபதி சிதம்பரம், 1957 இல் 888 ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகள் இன்று 524 க்கு குறைந்துள்ளன. இது வரலாறு. அதோடு தற்போது சுமார் 100 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்ப்பள்ளிகளின் மீது மத்திய வர்கத்தினரிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளதை அனைவரும் உணர்கிறோம். அதன் தாக்கம் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாக கூறினார்.

தமிழ் அறவாரியம், 200 ஆண்டுகால  தமிழ்க்கல்வி விழாவுக்காக இவ்வாண்டு தொடக்கம் முதல் பள்ளிகள்தோரும் மரம் நடும் விழா, தமிழ்க்கல்வி மாநாடு, புதையல் தேடும் விழா, தபால் முத்திரை  வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை  நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.