மலாய்க்காரர்கள் ஒன்றுபடாவிட்டால் அந்நியர் தலையிடுவர் என்று மகாதிர் அச்சம்

நாட்டில் முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்துக் கவலை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்கள் மூன்று பிரிவினராக பிரிந்து கிடக்கிறார்கள் என்றார்.

இந்நிலை தொடருமானால், அந்த ஒற்றுமைக்குறைவைச் சாதகமாக்கிக் கொண்டு அந்நியர் தலையீடு நிகழலாம் என்றாரவர்.

அம்மூன்று பிரிவினரும், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளதுபோல் ஆயுதமேந்திப் போராடவில்லையே தவிர தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றவர் சொன்னார்.

“பிரிந்து கிடப்பதாலேயே நாம் பலவீனமடைந்திருக்கிறோம். 50 ஆண்டுகளுக்குமுன் முஸ்லிம்களும் மலாய்க்காரர்களும் நாட்டின் விடுதலைக்காக போராடியதையும் மலாயன் யூனியனை எதிர்த்ததையும் நாம் மறந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

“அந்நேரத்தில் முஸ்லிம்கள் பலவீனமாகத்தான் இருந்தார்கள். பணமோ, மற்ற வகை பலமோ நம்மிடம் இல்லை. ஆனால் ஒற்றுமை இருந்தது.அதனால் மலாயன் யூனியனை எதிர்க்க முடிந்தது.” மகாதிர், நேற்றிரவு கொடியாங்கில் மஸ்ஜிட் அல்-ஏசானில் நோன்பு துறக்கும் நிகழ்வு ஒன்றில் பேசினார்.

டாக்டர் மகாதிருடன் அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முகம்மட் அலியும்  மகனும் அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்று பல முஸ்லிம் நாடுகள் உள்ளுக்குள் சண்டையிட்டுக்கொண்டே தங்கள் இறையாண்மையை  அந்நியர்களிடமிருந்து காக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளன; அத்துடன் பசி பஞ்சம் போன்றவற்றையும் எதிர்நோக்குகின்றன என்றவர் கூறினார்.

இவைபோன்ற அல்லல்கள் ஏற்படாதிருக்க இந்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று மகாதிர் குறிப்பிட்டார்.

-பெர்னாமா