டிஓஜே வழக்கு குறித்து விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது- முன்னாள் நீதிபதி

judge1எம்டிபி    நிதி   கையாடல்     செய்யப்பட்டதன்   தொடர்பில்  அமெரிக்க   நீதித்துறை (டிஓஜே)    தொடுத்துள்ள   சிவில்   வழக்கு    குறித்து     அமைச்சர்கள்   விளக்கமளிப்பது    நீதிமன்றத்தை   அவமதிப்பதாகும்    என்று   கூறி     அவர்களைத்   தடுக்கக்  கூடாது    என   முன்னாள்   முறையீட்டு   நீதிபதி    ஒருவர்    கூறினார்.

முன்னாள்   நீதிபதி    முகம்மட்  ஹிஷாமுடின்    முகம்மட்    யூனுஸ்,    நேற்று  மக்களவைத்   தலைவர்    பண்டிகார்   அமின்    மூலியா   நாடாளுமன்றத்தில்    செய்த   அறிவிப்பு  குறித்துக்   கருத்துரைத்தபோது  அவ்வாறு   சொன்னார்.

இங்கு  நீதிமன்றத்தை    அவமதிக்கும்    விவகாரமே   இல்லை     என்றாரவர்.

“ஏனென்றால்   அது   வெளிநாட்டில்   நடக்கும்   வழக்கு.  மலேசிய   நீதிமன்ற   வழக்குகள்   குறித்துப்   பேசுவதுதான்    நீதிமன்றத்தை    அவமதிப்பதாகும்”,   என   கடந்த   செப்டம்பரில்    பணி  ஓய்வு  பெற்ற   ஹிஷாமுடின்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

அமெரிக்காவில்  கலிபோர்னியாவில்    அமெரிக்க   நீதித்துறை  தொடுத்துள்ள    வழக்கு  பற்றிப்   பேசுவது   நீதிமன்றத்தை    அவமதிப்பதாகும்    என்பதால்    அமைச்சர்கள்   அது   தொடர்பான   கேள்விகளுக்குப்    பதிலளிக்க    வேண்டிய   அவசியமில்லை    என்று  பண்டிகார்    நேற்று    அறிவித்திருந்தார்.