மலேசிய கால்பந்து சங்க(எப்ஏஎம்)த்தின் முன்னாள் அதிகாரி ஒருவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எப்ஏஎம் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக உத்துசான் ஆன்லைன் அறிவித்துள்ளது.
தெங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் ஆகிய முன்னாள் பிரதமர்கள் எப்ஏஎம் தலைவர்களாக இருந்ததுண்டு என்று ராஜா அஹமட் சைனுடின் ராஜா ஒமார் கூறினார்.
“எப்ஏஎம் தலைவராக இருப்பவர் செல்வாக்கு படைத்தவராக இருத்தல் வேண்டும். அப்பதவியைப் பிரதமருக்குக் கொடுப்பதில் என்ன தவறு?”, என்றவர் வினவினார்.
“என்னைப் பொருத்தவரை நஜிப் ஒரு மகத்தான தலைவர். அவரால் விளையாட்டாளர்களுக்கு நல்லூக்கத்தைக் கொடுத்து நாட்டில் கால்பந்தின் தரத்தை உயர்த்த முடியும்”, என்றாரவர்.
எப்ஏஎம் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெறும். பகாங் பட்டத்திளவரசர் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா மீண்டும் எப்ஏஎம் தலைவராக போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார்.
அப்பதவிக்கு ஜோகூர் பட்டத்திளவரசர் துவாங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அல்லது கிளந்தான் கால்பந்து சங்கத் தலைவர் அனுவார் மூசா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று ஊகங்கள் அடிபடுகின்றன.