நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அமெரிக்க நீதித்துறை (டிஒஜெ) 1எம்டிபி சம்பந்தமாக தொடுத்திருக்கும் வழக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதற்கு தடை விதித்துள்ளார். பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் அவரின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஒஜெ தொடர்ந்துள்ள வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணை நிலையில் இருப்பதால் கேள்விகள் கேட்கக்கூடாது என்று பண்டிகார் கூறியிருப்பதை முகைதின் ஏற்றுக்கொள்ளவில்லை.
டிஒஜெ குறித்து ஏராளமானோர் ஒவ்வொரு நாளும் பேசுகின்றனர். “நான் இது என்ன என்று எல்லா கூட்டங்களிலும் மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளேன். அதோடு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும், ஏனென்றால் இது ஒரு கடுமையான ஊழல்.
“(ஆகவே) எப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க அனுமதி மறுக்க முடியும்?’, என்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்தித்த போது முகைதின் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தலைவரின் முடிவு இறுதியானது என்று தமக்குத் தெரியும் என்று கூறிய முகைதின், பண்டிகார் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.