அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் பங்குச் சந்தையில் பதிவுபெற்ற சில நிறுவனங்களும் இருப்பது தெரிய வந்திருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் அவை அரசாங்கக் குத்தகைகள் பெறுவதற்கும் முனைவதைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றைக் கபடதாரிகள் எனச் சாடினார்.
“யாரையும் ஆதரிப்பதில் தவறில்லை. ஆனால், அரசாங்கக் குத்தகைகளுக்கு விண்ணப்பிக்காதீர்கள்”, என்றாரவர். கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அந்த நிறுவனங்களின் பெயர்களைக் கேட்டதற்கு, “நிறுவனங்களைத் தெரியும். அவற்றின் பெயர்களை வெளியிட மாட்டேன்”, என்றார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் அரசாங்கக் குத்தகைகள் பெறுவதைத் தடுக்க அவை கருப்புப் பட்டியலிடப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றில் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.