சுல்தானா அமினா மருத்துவமனை(எச்எஸ்ஏ) தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவரும் வேளையில் மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் மெடிவெஸ்ட் நிறுவனத்துக்குத் தடை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை.
மெடிவெஸ்ட் நிறுவனம் ஜோகூரில் மேலும் 12 மருத்துவமனைகளுக்கும் நெகிரி செம்பிலானில் ஆறுக்கும் மலாக்காவில் மூன்று மருத்துவமனைகளுக்கும் பராமரிப்புச் சேவைகளை வழங்கி வருவதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யஹயா கூறினார்.
“விசாரணை நடந்துவரும் வேளையில் மெடிவெஸ்ட் நிறுவனத்துக்குத் தடை விதித்தால் ஜோகூரிலும் நெகிரி செம்பிலானிலும் மலாக்காவிலும் அது வழங்கிவரும் சேவைகள் பாதிப்புறும்”, என்றாரவர்.
ஹில்மி, லியு சுன் தோங்(டிஏபி- குளுவாங்)கின் கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.
ஜோகூர் பாரு எச்எஸ்ஏ-இன் பராமரிப்பு வேலைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு மெடிவெஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் தகவலைச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் நேற்று வெளியிட்டார்.