கைரி: பெர்சே பேரணியைத் தடுத்து நிறுத்துவதற்கு சாலைகளை மூடுங்கள்

 

Khairycloseroadsபெர்சே 5 பேரணி நடப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு அப்பேரணி செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சாலைகள் அனைத்தையும் மூடிவிடும்படி போலீஸ் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேரணி நடை தொடங்குவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் ஒன்றுகூடும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவ்விடங்களிலிருந்து டாத்தாரான் மெர்தேக்காவுக்கு அணிவகுத்து நடப்பவர்களை போலீசார் தடைசெய்ய முடியும் என்று இளஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறுகிறது.

“பெர்சே 3 இன் போது நடந்த சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

“ஆகவே, போலீஸ் டாத்தாரான் மெர்தேக்கா பெர்சே 5 பேரணிக்கு பயன்படுத்தப்படுவதை மட்டும் தடுக்காமல், முடிந்தால் பெர்சே ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அவர்களின் ஒன்றுகூடும் இடங்களிலிருந்து நடந்து வருவதையும் தடுக்க வேண்டும்” என்று அம்னோ இளஞர் தலைவர் கைரி கூறினார்.

உலுதிராங்கானுவில் அம்னோ இளைஞர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கைரி, “அம்னோ இளைஞர் உறுப்பினர்கள் சிகப்புச் சட்டையினருடன் சேர்ந்துகொள்வது ஓகே” என்றார்.

பெர்சே 5 ஐ கைவிட்டால், சிகப்புச் சட்டை இயக்கம் இருக்காது என்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட் கூறியிருந்ததை கைரியும் கூறினார்.

சிகப்புச் சட்டையினர் பெர்சேயிக்கு எதிரானவர்கள் என்பதை அவர்கள் காட்ட விரும்புகின்றனர். பெர்சே எதையும் செய்யாவிட்டால், நிச்சயமாக சிகப்புச் சட்டையினர் திருப்பித் தாக்க மாட்டார்கள். ஆகவே, இதற்கான பொறுப்பு பெர்சேயை சார்ந்ததாகும் என்றாரவர்.

“இதற்குச் சிறந்த வழி பெர்சே 5 இடம்பெற அனுமதிக்காதிருத்தல் ஆகும்”, என்றார் கைரி.

பெர்சே 5 பேரணியில் பங்கேற்கும் அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று அவர்  எச்சரிக்கை விடுத்தார்.