எல்ஆர்டி அல்லது மொனோ இரயில் வண்டிகள் 15 நிமிடம் தாமதமாக வந்தால் பயனர்கள் அவர்களின் கட்டணத் தொகையைத் திரும்பப் பெறலாம் எனப் பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி இன்று மக்களவையில் அறிவித்தார்.
அல்லது பயனர்கள் ஒரு பற்றுச்சீட்டைப் பெற்று அதை மறுநாள் பயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“இக்கொள்கை ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் எம்ஆர்டி-க்கும் பொருந்தும்”, என அமைச்சர் எழுத்துவடிவில் அளித்த பதிலில் கூறினார்.
அலோர் காஜா எம்பி கோ நை குவோங், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சேவைகள் தாமதப்படும்போது, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளதுபோல் கட்டணத்தொகையைத் திரும்பப் பெற இயலுமா என்று வினவியிருந்தார்.
லண்டனில் பாதாள இரயில் சேவையில் 15 நிமிடத் தாமதம் ஏற்பட்டால் பயனர்கள் கட்டணத் தொகையைத் திரும்பப் பெற முடியும் என்பதைக் குறிப்பிட்டிருந்த கோ, அப்படி ஒரு கொள்கை எல்ஆர்டி, எம்ஆர்டி சேவைத்தரம் மேம்படுவதற்கு உதவும் என்றும் கூறியிருந்தார்.