என்எப்சி வழக்கில் ரபிஸிக்கு எதிராகவும் மலேசியாகினிக்கு சாதகமாகவும் நீதிமன்றம் தீர்ப்பு

 

RafizilostNFCcaseஎட்டு சொத்துகளுக்கு கடன் பெறுவதற்கு அராசாங்க நிதியை நெம்புகோள்களாக என்எப்சி பயன்படுத்தியது என்று பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி கூறியிருந்ததற்கு எதிராக அவர் மீது என்எப்சி நிறுவனம் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ரபிஸிக்கு எதிராக தீர்ப்பளித்தது.

ஆனால், ரபிஸியின் அறிக்கையை செய்தியாக வெளியிட்டிருந்ததற்காக மலேசியாகினிக்கு எதிராக என்எப்சி நிறுவனம் கோரியிருந்த இழப்பீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிகேஆர் உதவித் தலைவரான ரபிஸி ரிம150,000 என்எப்சி நிறுவனத்திற்கும் ரிம50,000 என்எப்சி நிறுவனத்தின் தலைவர் முகமட் சாலே இஸ்மைலுக்கும் கட்டும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

என்எப்சி நிறுவனமும் சாலேயும் மலேசியாகினிக்கு ரிம50,000 செலவுத் தொகையாகக் கட்டும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மலேசியாகினி முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் பொதுவிவாகாரங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டிய செய்தியாளர்களின் கடமைக்கு இந்த வழக்கின் மூலம் நீதிபதி அங்கீகாரம் அளித்துள்ளார் என்று கூறினார்.

இன்று மலேசியாகினிக்கு மட்டுமல்ல, மலேசியாவிலுள்ள அனைத்து செய்தியாளர்களுக்கும் ஒரு மகத்தான நாள் என்று ஸ்டீபன் மேலும் கூறினார்.

இவ்வழக்கில் என்எப்சி நிறுவனத்தை வழக்குரைஞர் ரஸ்லான் ஹடிரி ஸுல்கிப்லியும் மலேசியாகினியை வழக்குரைஞர் கே. சண்முகாவும் பிரதிநிதித்தனர்.