பிரதமர் குடும்பத்தையும் சேர்த்துத்தான் சீனா அழைத்திருந்தது

tripசீனா,   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கு   விடுத்த   அழைப்பு    அவரது   குடும்பத்துக்கும்   சேர்த்துத்தான்   என்று    கூறுகிறார்   பிரதமரின்   துணைவியார்   ரோஸ்மா   மன்சூரின்    உதவியாளர்   ரிசால்   மன்சூர்.

“சீன   அரசாங்கம்   பிரதமருக்கும்   அவரின்  குடும்பத்தாருக்கும்   சேர்த்தே   விடுத்த   அழைப்பு    அது”,  என்றாரவர்.

நண்பர்களுக்கும்  அவர்களின்   குடும்பத்தாருக்கும்   முக்கியத்துவம்   அளிப்பது   சீனர்களின்   பண்பாடு.  அதைத்தான்   சீனாவின்  உயர்த்   தலைவர்களும்  பின்பற்றுகிறார்கள்   என்று  ரிசால்  தம்  முகநூல்   பக்கத்தில்   பதிவிட்டுள்ளார்.

சீனாவுக்கான  பிரதமரின்     அதிகாரப்பூர்வ   பயணத்தில்   நஜிப்பின்  மாற்றான்  பிள்ளை  ரிஸா   அசிசும்   உடன்  சென்றிருப்பது   குறித்து  குறைகூறப்படுவதற்கு  ரிசால்  இவ்வாறு   எதிர்வினையாற்றினார்.

நஜிப்   அதிகாரப்பூர்வ  பயணங்களில்   தம்   குடும்பத்தாரை   அழைத்துச்   செல்வது    அரிது   என்று  கூறிய   ரிசால்,  இந்தப்  பயணத்தால்  கிடைக்கப்போகும்   நன்மைகளைப்   பொதுமக்கள்   எண்ணிப்    பார்க்க  வேண்டும்   என்றார்.