யுனிவர்சிடி மலேசியா சரவாக்(யுனிமாஸ்), கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் நிறுவிய ஓபன் சொசைடி ஃபண்ட்ஸ்(ஓஎஸ்எப்) நிறுவனத்திடமிருந்து மானியம் பெற்றதாகக் கூறப்படுவதை அடியோடு மறுக்கிறது.
அதனை மறுத்த யுனிமாஸ் துணை வேந்தர் பேராசிரியர் முகம்மட் காடிம் சுவார்டி, ஒருவேளை பல்கலைக்கழகத்துக்குத் தெரியாமல் அதன் ஆராய்ச்சியாளர்கள் அல்லது விரிவுரையாளர்கள் “அதிகாரப்பூர்வமற்ற வழிகளில்” நிதியுதவி பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரை, ஓஎஸ்எப்- இடமிருந்து பல்கலைக்கழகம் மானியத்தையோ நிதியுதவியையோ பெற்றதில்லை. ஓஎஸ்எப்புக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை”, என்றாரவர்.
ஓஎஸ்எப்-இன் 2014 அறிக்கையில், அதனிடம் நிதியுதவி பெற்றோர் பட்டியலில் யுனிமாஸ் பெயரும் இருப்பது குறித்து வினவியதற்கு காடிம் இவ்வாறு விளக்கமளித்தார்.
“அது விரிவுரையாளர்களுக்கு அல்லது ஆராய்ச்சியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட மானியமாக இருக்கலாம். பல்கலைக்கழகத்துக்கு அது குறித்து தெரியாது”.