நவம்பர் 19 பேரணியில் பங்கேற்போர் கோலாலும்பூரில் ஜாலான் ராஜாவை விட்டும் டட்டாரான் மெர்டேகாவை விட்டும் விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் பெர்சேயைக் கேட்டுக்கொண்டிருப்பதாக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
ஜாலான் ராஜா, பெர்சே பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டட்டாரான் மெர்டேகாவை அடுத்துள்ள சாலையாகும்.
“பேரணி நடத்தலாமா கூடாதா என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால், நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி முதலில் டட்டாரான் மே பேங் (ஜாலான் பங்சார்)கிலும் மஸ்ஜித் நெகராவிலும் ஒன்று கூடி அங்கிருந்து டட்டாரான் மெர்டேகா நோக்கிச் செல்வோம்.
“டட்டாரான் மெர்டேகாவுக்குள் நுழைய மாட்டோம்; டட்டாரான் மெர்டேகாவுக்கு அருகில் இருப்போம்.
“தடை டட்டாரான் மெர்டேகாவுக்கும் ஜலான் ராஜாவுக்கும் மட்டும்தான். அப்பகுதிகளுக்குள் நாங்கள் செல்ல மாட்டோம். கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்தின் வேண்டுகோளை மதிப்போம்”, என்றாரவர்.
மரியா பேரணி நடத்தப்போவது குறித்த அறிவிக்கையை டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.