சிலாங்கூர் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதிகளுக்காகக் கொடுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை மக்களுக்குச் செலவிடாமல் அலுவலகச் செலவினங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என டிஏபியின் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறுகிறார்.
“நேற்று சட்டமன்றத்தில் சிலாங்கூர் பட்ஜெட் 2017 மீதான விவாதங்களை முடித்து வைத்துப் பேசிய மந்திரி புசார், இந்த விவகாரத்தை எழுப்பி அவர்கள் அந்த ஒதுக்கீடுகளை மக்களின் நன்மைக்காக செலவிட வேண்டும் என்றார்.
“பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அவர்களுக்கான ரிம 6,000 மாதாந்திர ஒதுக்கீட்டை எடுத்து ஏழெட்டு மாதங்களாக பயன்படுத்திக் கொண்டிருப்பது மாநில அரசுக்குத் தெரிய வந்துள்ளது.
“அப்பணம் 2015 முதல் மாநில எதிரணி சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் ரிம200,000 ஆண்டு ஒதுக்கீட்டில் ஒரு பகுதியாகும்”, என்றவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசு, ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த ஆண்டில் அவர்களின் தொகுதிச் செலவுகளுக்காக ரிம800,000 ஒதுக்கீட்டை வழங்கும். இவ்வாண்டில் வழங்கப்படும் தொகை ரிம700, 000. பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆண்டு ஒதுக்கீடு ரிம200,000தான். அதில் மாற்றமில்லை.
“ரிம200,000 ஒதுக்கீடு பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் முறையிட்டிருக்கிறார்கள்.
“அப்பணம் மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாதிருக்க முடியாது”, என லாவ் கூறினார்.
2015இல் அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோது அவர்கள் அதை நிராகரித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவதுபோல் தங்களுக்கும் ரிம700,000 கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
“ஈராண்டுகளுக்குமுன் புறக்கணித்த பணத்தை இப்போது கமுக்கமாக பயன்படுத்திக் கொள்கிறீர்களே அது ஏன்?”, என லாவ் வினவினார்.
“ஒதுக்கீட்டை அவர்கள் நேர்மையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் வருமாண்டுகளில் அரசு அதை அதிகரிக்கக் கூடும்”, என்றாரவர்.