தேர்தல் ஆணையம் (இசி) பிஎன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை வலியுறுத்திய சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முதன்மை செயலாளரை அதன் துணைத் தலைவராக்கப் பரிந்துரைக்கப்பட்டதைக் கவனப்படுத்தினார்.
அப்பரிந்துரையை ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை என்றவர் கூறினார்.
“துணைத் தலைவராக நியமனம் செய்வதற்கு ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அவர் யாரென்றால் பிரதமரின் முதன்மை செயலர்”, என அஸ்மின் குறிப்பிட்டதாக சினார் ஹரியான் கூறியது.
“அப்பரிந்துரையை ஆட்சியாளர் மன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு நன்றி சொல்கிறோம். இது இசி-யை பிஎன் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது”, என சட்டமன்றத்தில் ஹுலு பெர்னம் பிஎன் பிரதிநிதி ரோஸ்னி சொஹாரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் சொன்னார்.
இசி தேர்தல் விவகாரங்களில் தலையிடுவதற்கு ஆதாரங்கள் உண்டா என்று ரோஸ்னி கேட்டிருந்தார்.
அஸ்மின், அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசாவின் தனிச் செயலாளர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா இசி தலைவராக நியமிக்கப்பட்டது ஏன் என்றும் வினவினார்.
“அம்னோவின் மூத்த அதிகாரி ஒருவர் ஆணையத் தலைவராக அமர்த்தப்பட்டால் இசி எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்?”.
தேர்தலை நடத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள ஓர் அமைப்பில் அரசியல் கட்சி எதுவும் இடம்பெறக் கூடாது என பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் குறிப்பிட்டார்.