சிவப்புச் சட்டை இயக்கத்தினர் மலேசியாகினி அலுவலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கக் கோடீஸ்வரர் சோரோஸின் ஆதரவுடன் செயல்படும் ஓபன் சொசைடி அறநிறுவன(ஓஎஸ்எப்)த்திடமிருந்து உள்நாட்டு சமூக அமைப்புகள் பல நிதியுதவி பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணியை நவம்பர் 19க்குத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 5 பேரணிக்கு எதிர்ப் பேரணியாக இன்று டட்டாரான் மெர்டேகாவில் நடத்தப்போவதாகத்தான் சிவப்புச் சட்டையினர் முதலில் அறிவித்திருந்தனர்.
ஆனால், டட்டாரான் மெர்டேகாவில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அதை மலேசியாகினி அலுவலகத்தில் நடத்த முடிவு செய்தார்கள்.
பேரணியில் கலந்துகொள்ள இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்தே சிவப்புச் சட்டையினர் கார்களிலும் பேருந்துகளிலும் வந்து சேரத் தொடங்கினர்.
மூன்று மணி அளவில் சுமார் 300 பேர் அங்கு கூடியிருந்தனர்.
அவர்கள் அவ்வப்போது “tutup Malaysiakini (மலேசியாகினியை மூடுங்கள்)” “hancur Malaysiakini (மலேசியாகினியை ஒழிப்போம்)” என முழக்கமிட்டார்கள்.
கைகளில் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர். அதில் ஒன்று “Maria Chin & Bersih 5 boneka Soros & Cina DAP (மரியா சின்னும் டிஏபி சீனர்களும் சோரோஸின் கைப்பாவைகள்)” என்ற வாசகத்தைக் கொண்டிருந்தது.
இன்னொன்றில் “Kami sedia bertempur (நாங்கள் போருக்குத் தயார்)” என்று எழுதப்பட்டிருந்தது.
சிலருக்கு அங்கு நடப்பது என்னவென்பதே தெரியவில்லை. சுங்கை பூலோவிலிருந்து வந்திருந்த நடுத்தர வயதுள்ள மகளிர் குழு ஒன்றை அணுகி வினவியதற்கு, “எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. மலாய்க்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்திருப்பதாக நினைக்கிறோம்”, என்றார்கள்.
இதனிடையே, மலேசியாகினி அலுவலகம் உள்ள பிஜே51 தொழில் பூங்காவைச் சுற்றிலும் இன்று காலையிலிருந்தே போலீஸ் படையினர் காவல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.