மலேசியாகினி அலுவலகத்துக்கு அருகில் சிவப்புச் சட்டையினர் ஆர்ப்பாட்டம்

demo2நேரம்  பிற்பகல்  மணி  3.15.  மலேசியாகினிக்கு   அருகில்   ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ள   சிவப்புச்   சட்டையினர்   எண்ணிக்கை  இப்போது   500  ஆக   கூடியுள்ளது.

தன்னை  “ஆபாங்  ஹல்க்  ஹோகன்”  என்று    கூறிக்கொண்ட   ஒருவர்  கூட்டத்தினரை  நோக்கிப்  பேசினார்.    அவர்கள்   துணிச்சலுடன்  பேரணியில்  கலந்துகொள்ள   வேண்டும்  என்றார்.

தன்னை  இஸ்லாத்தின்   காவலன்   என்று   அழைத்துக்  கொண்ட   அவர்   நாடு  அமைதியாக   இருக்க   வேண்டும்    என்பதே  சிவப்புச்  சட்டையினரின்  விருப்பம்  என்றார்.

“நாங்கள்   அன்னியர்   தலையீட்டை   விரும்பவில்லை.  நாட்டை   யார்   ஆள்கிறார்களோ   அவர்களுக்குத்தான்   எங்கள்   ஆதரவு”,  என்றவர்  முழக்கமிட்டார்.

அம்னோ  இளைஞர்   செயல்குழு  உறுப்பினர்   அர்மாண்ட்    அழா  அபு   ஹனிபாவும்    கூட்டத்தினரிடையே    உரையாற்றினார்.

மலேசியாகினி  யூதர்களிடமிருந்து   பண  உதவி   பெறுவதாகவும்    அதற்கு   எதிர்ப்புத்   தெரிவிக்கவே   தாங்கள்    ஆர்ப்பாட்டம்   செய்வதாகவும்   கூறினார்.

சிவப்புச்   சட்டையினர்   ஊடகங்களையும்   போலீசையும்   மதிப்பதாக    அவர்  சொன்னார்.

“ஊடகங்கள்   எங்களை   மதித்தால்   நாங்கள்  ஊடகங்களை   மதிப்போம்.

“உண்மையை   எழுதுங்கள், கதை   கட்டாதீர்கள்,  பொய்யான   செய்திகளை   வெளியிடாதீர்கள்.  இது  இனவாதப்   பேரணி    அல்ல,   தேசியவாதப்   பேரணி”,  என்றாரவர்.