‘எனக்குத் தனிச் செயலாளர் யாரும் இல்லை’, பெர்னாமா செய்திக்கு இராமசாமி

ramasamy சதீஷ்  முனியாண்டியை   தம்முடைய   தனிச்   செயலாளர்    என்று  குறிப்பிடும்   பெர்னாமா   செய்தியை   பினாங்கு     துணை   முதல்வர்  II  பி.இராமசாமி  மறுத்துள்ளார்.

டிஏபி   சோசலிஸ்ட்  இளைஞர்  பகுதியின்   உறுப்பினரும்   செபராங்  பிறை   முனிசிபல்   கவுன்சிலருமான   சதீஷ்,   இன்று   பிற்பகல்  மணி   3க்கு    புக்கிட்   அமான்   கூட்டரசு    போலீஸ்    தலைமையகத்தில்   விசாரிக்கப்படுவார்.

அவர்,  ஜோகூர்  சுல்தான்   தெரு   ஆர்ப்பாட்டங்களுக்குத்   தடை  விதித்தது   குறித்து   முகநூலில்  கருத்துத்   தெரிவித்திருந்தது  தொடர்பில்   விசாரணைக்கு   அழைக்கப்பட்டுள்ளார்.

“அவர்   என்னுடைய   தனிச்  செயலாளரோ   அரசியல்    செயலாளரோ   அல்ல;  அப்படி   யாரும்   எனக்கு  இல்லை”,  என  இராமசாமி   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

“அது  சதீஷின்   தனிப்பட்ட   கருத்து.  அவ்விவகாரத்தில்   டிஏபி-யையோ   என்னையோ  இழுத்துவிட  முயலாதீர்கள்”,  என்றவர்   குறிப்பிட்டார்.

கட்சி    சதீஷைக்  கண்டிருத்திருப்பதாகவும்    அவரும்   தன்    செயலுக்குப்   பகிரங்க    மன்னிப்பு    கேட்டதுடன்    தன்னுடைய   கருத்துகளையும்   மீட்டுக்கொண்டிருக்கிறார்  என  இராமசாமி   கூறினார்.