பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வழக்கு தொடர்வதில்லை என்று சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் செய்த முடிவை எதிர்ப்பதற்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் செய்த மனுவை கோலாலும்பூர் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நீதிமன்றம் ஏஜியின் முடிவில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹனிபா பரிகுல்லா, வாதி வேறு வழிமுறைகளைத்தான் நாட வேண்டும் என்றார்.
“எனவே, அவரது மனு நிராகரிக்கப்படுகிறது”, என்றவர் சொன்னார்.
ஏஜிக்கு கூட்டரசு அரசமைப்பின் சட்டப்பிரிவு 145(3)-இன்கீழ் வழக்கு தொடுப்பதாக வேண்டாமா என்ற முடிவு செய்வதில் முழு அதிகாரம் உண்டு என்று அரசுத் தரப்பு முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றது.
நீதிமன்றமே இப்படிச் சொன்னால் வேறு வழி என்ன இருக்கிறது என்று ஜைட் ஏமாற்றத்துடன் கூறினார்.
“ஒரு நேர்மையற்ற பிரதமர், வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை நேர்மையற்ற ஏஜி ஒருவரை நியமித்து விட்டால் போதும்”, என்றாரவர்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.