உடலில் ஊனம், உள்ளத்தில் உறுதி, பெர்சே போராட்ட வீரர் இசையா ஜோசையா உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்

crusaderஒவ்வொரு பெர்சே பேரணியிலும் தவறாமல் தமது முடவர் கைக்கோலுடன் பங்கேற்கும் போராட்டவாதி இசையா ஜோசையா நவம்பர் 19 இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 5 பேரணி எவ்விதத் தடைகளும் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதற்காக இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு வாரத்திற்கு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

“உபவாசம் இருத்தல், பிரார்த்தனை செய்தல்” வழி பெர்சே 5 பேரணி அமைதியாக நடைபெறும் என்று அவர் நம்புகிறார்.

பெர்சே பேரணிகளில் மிகுந்த ஆர்வத்துடம் பங்கேற்கும் ஜோசையாவுக்கு தொல்லை கொடுப்பாரும் இருக்கிறார்கள்.

கண்ணீர் புகைத் தாக்குதல், பெடரல் ரிசர்வ் யுனிட் (எஃப்ஆர்யு) வன்முறை ஆகியவற்றை அனுபவித்துள்ளதாக அவர் கூறிக்கொண்டார்.

“ஊனமுற்றுள்ள நீ, பேசாமல் வீட்டிலிருக்க முடியாதா?”, என்று போலீசார் அவரிடம் கூறியதாகவும் ஜோசையா தெரிவித்தார்.

ஆனால், இப்போதெல்லாம் போலீசார் அவரிடம் நட்புறவோடு நடந்துகொள்வதாக அவர் மேலும் கூறினார்.

இதற்கான காரணம் தாம் அடிக்கடி உடல் ஊனமுற்றவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கும் பிரச்சனையை எழுப்புவதாகும்.

“இவற்றைப் பற்றி நான் சில செராமாக்களில் கேள்வி எழுப்பி உள்ளேன். அதனால்தான் போலீசார் மகிழ்ச்சியடைகின்றனர். எனது எதிரிகள் அவர்கள் அல்ல, ஆனால் பதவிகளில் இருப்பவர்கள்”, என்றார் ஜோசையா.