பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) உதவித் தலைவர் அப்துல் ரஷிட் ரஹ்மான், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் சாத்தியத்தை மறுக்கவில்லை.
“நீங்கள் நாட்டை மாற்ற நினைத்தால், நிச்சயமாக ஆட்சியில் இருக்க வேண்டும்.
“குறிப்பிட்ட இடங்களில் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் இருக்குமானால் ஏன் போட்டியிடக் கூடாது? எங்கு வெற்றிபெற முடியுமோ அந்த இடத்தைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன்”, என்று தேர்தல் ஆணைய(இசி)த்தின் முன்னாள் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பெர்சத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சுட்டிக்காட்டிய அப்துல் ரஷிட், 74, தீவிர அரசியலில் ஈடுபட முடியாத அளவுக்குத் தமக்கு வயதாகி விடவில்லை என்றார்.
இசி தலைவராக இருந்தபோது பெற்ற பட்டறிவை பெர்சத்துவின் தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ளப் போவதாகவும் அவர் சொன்னார்.
“என் அறிவை அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் நாட்டின் நன்மைக்காகவும் பயன்படுத்துவேன்”, என்றாரவர்.
ஆனால், அப்துல் ரஷிட் உடல் நலம் குன்றியிருப்பதால் நவம்பர் 19 பெர்சே பேரணியில் கலந்துகொள்ள மாட்டார்.