பாண்டான் எம்பி முகம்மட் ரபிசி ரம்லி, தம் ஆதரவாளர்கள் தாம் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் என்பதை நினைத்து கவலையுற வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் தம் கடமைகளைச் சரிவர செய்திருப்பதாலும் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றி இருப்பதாலும் சிறையிலும் தம்மால் நிம்மதியாக உறங்க முடியும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் கூறினார்.
மாறாக, தம் ஆதரவாளர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியில் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைக் குடும்பங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
“எனக்காகவோ என் மனைவிக்காகவோ, பிள்ளைக்காகவோ வருத்தப்பட வேண்டாம். சீன, மலாய், இந்திய, ஈபான், கடாசான் இன ஏழை மக்களின் பிள்ளைகளை நினைத்து கவலைப்படுங்கள்.
“நஜிப்பையும் (அவரின் துணைவியார்) ரோஸ்மாவையும் நாம் கவிழ்க்காவிட்டால் அவர்களை (ஏழைகளை)ப் பாதுகாக்கப் போவது யார்?”, என நேற்றிரவு ஒரு செராமாவில் ரபிசி பேசினார்.
‘Projek Buang Najib’ (நஜிப்பை வெளியேற்றும் திட்டம்) என்ற தலைப்பில் ரபிசி தொடர் உரை நிகழ்த்தவிருக்கிறார் . அதில் ஒரு பகுதியாகத்தான் நேற்று கம்போங் செராஸ் பாருவில் அந்த செராமா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.