சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் நிதிச் சுமை அதிகரிக்கும்: மகாதிர் எச்சரிக்கை

dr mதிட்டங்களுக்காக  பெருந்  தொகைகளைக்  கடனாகப்  பெறும்  புத்ரா   ஜெயாவின்   பழக்கத்தினாலும்  ரிங்கிட்டின்   மதிப்பு   தொடர்ந்து   குறைந்து   வருவதாலும்    நாடு   நொடித்துப்  போகும்   நிலை   உருவாகும்   என   டாக்டர்  மகாதிர்  முகம்மட்    எச்சரிக்கிறார்.

இப்படிப்பட்ட   கடன்களுக்கு  மலேசியர்கள்   எதிர்ப்புத்    தெரிவிக்க   வேண்டும். அக்கடன்கள்   எதிர்காலத்தில்   மிகப்  பெரிய  நிதிச்  சுமையாக    அமையும்  என்று   முன்னாள்   பிரதமர்   அவரது  வலைப்பதிவில்   குறிப்பிட்டிருந்தார்.

கிழக்குக்  கரை   இரயில்  இணைப்பு(இசிஆர்எல்),    கோலாலும்பூருக்கும்  சிங்கப்பூருக்குமிடையிலான   உத்தேச  அதிவிரைவு   இரயில்    ஆகிய   இரண்டுக்கும்   மட்டுமே   ரிம100 பில்லியன்  கடன்   பெற  வேண்டியிருக்கும்.

“கடன்கள்  யுஎஸ்டி  ஆக   அல்லது  யுவானாக   இருக்கும்.  ரிங்கிட்   மதிப்பு   வெகுவாகக்   குறைந்து   வருகிறது……ஆக  மலேசியாவின்  கடன்கள்  கூடும்.

“சொத்துகளை  விற்றுத்தான்   கடன்  தொகையைத்   திருப்பிச்  செலுத்த  வேண்டும்   என்ற   நிலை   உருவாகுமானால்   மலேசியாவின்  மதிப்புமிக்க   நிலப்   பகுதிகள்   வெளியாருக்குச்  சொந்தமாகி  விடும்”,   என்று   எழுதும்   மகாதிர்   ஏற்கனவே   1எம்டிபி   கடனால்    அரசாங்கம்   தள்ளாடிக்  கொண்டிருக்கிறது   என்றார்.

கிரீஸ்   நாட்டை   எடுத்துக்காட்டாகக்  குறிப்பிட்ட   மகாதிர்,  கடன்  கொடுத்தவர்கள்  ஆதிக்கம்    செலுத்தத்   தொடங்கி   விடுவர்   என்றார். நாட்டின்  நாணய  மதிப்பு   வெகுவாகக்  குறைக்கப்படும்.

நாணய  மதிப்பு    குறைந்தால்    மக்கள்   மேலும்   ஏழைகளாகி   விடுவர்.

“60 ஆண்டு  உயர்  வளர்ச்சி  கண்டு   வந்த   மலேசியா,  அரசாங்கத்தின்   கடன்  வாங்கும்  பழக்கத்தினால்   ஒரு  ஏழை  வளரும்   நாடாக   மாறிவிடும்.

“2020  தொலைநோக்குத்  திட்டத்தை   மறந்து  விடுங்கள்.  மலேசியா   உதவிக்காகக்    கை  ஏந்தும்   நிலை   ஏற்படும்.  உதவியை   நம்பியிருக்கும்   நாடுகள்   அவற்றின்  சுதந்திரத்தைப்  பெருமளவு   இழந்து   விடும்”,  என்றாரவர்.