பெர்சே தினத்தன்று மகாதிர் வெளிநாட்டிலிருப்பார், ஆனால் அவரது ஆதரவு உறுதி

 

dr mவரும் சனிக்கிழமை, பெர்சே 5 பேரணி நாள், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் வெளிநாட்டில் இருப்பார். இது முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

இருப்பினும். அவர் தமது முழு ஆதரவையும் பெர்சேயின் இலட்சியத்திற்கு அளித்துள்ளார். மேலும், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் முழு ஆதரவும் பெர்சேயிக்கு உண்டு.

முன்னமே வரையப்பட்ட திட்டப்படி நவம்பவர் 19 இல் தாம் வெளிநாட்டில் இருப்பேன் என்று கூறிய மகாதிர், பெர்சே 5 பேரணிக்கு தமது ஆதரவும் உண்டு என்று இன்றிரவு ஓன்லைன் ரேடியோவான ரேடியோ பங்சார் உத்தாமா ஒலிபரப்பிய நேர்காணலில் கூறீனார்.

பதிவு செய்யப்பட்ட 36 நிமிட நேர்காணல் ஒலிபரப்பில் மகாதிர் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அனைவரும் இந்தப் பேரணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இப்பேரணி தேர்தல்களை தூய்மைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதால் அனைத்து எதிர்க்கட்சிகளும், பெர்சத்து உட்பட, பெர்சே பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.

சிகப்புச் சட்டையினரின் சினமூட்டும் செயல்களால் பெர்சே 5 பேரணிக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் குறித்து மகாதிர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். சிகப்புச் சட்டையினருக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்று மகாதிர் நம்புகிறார்.