சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாதீர்: டிஏபி, அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

dewanபினாங்கு    சட்டமன்றம்     தொடங்கி    ஒரு   மணி   நேரம்கூட    ஆகவில்லை   அவையில்   குழப்படி    செய்த  ஒரு   டிஏபி   பிரதிநிதிக்கும்    அம்னோ  பிரதிநிதிக்கும்   சட்டமன்றத்   தலைவர்   லாவ்   சூ   கியாங்      கடும்   எச்சரிக்கை   விடுத்தார்.

கேள்வி   நேரத்தின்போது   ஆர்.எஸ்.என். ராயரும் (டிஏபி-ஸ்ரீ டெலிமா),   ரோஸ்லான்     சைடினும் (பிஎன் -பினாங்   துங்கால்)   வாக்குவாதத்தில்   ஈடுபட்டதால்  சட்டமன்றத்   தலைவர்  சினமுற்றார்.

ஆட்சிக்குழு   உறுப்பினர்  டாக்டர்  அபிப்  பஹார்டின்  ஒரு  கேள்விக்குப்   பதிலளித்துக்   கொண்டிருந்தபோது    அச்சம்பவம்  நிகழ்ந்தது.

ராயர்   எழுந்து  நின்று   ஒரு  கேள்வி   கேட்க  முனைந்து       ஆறு   பேரைப்  பலி  கொண்ட  ஜோகூர்  சுல்தான்   அமினா  மருத்துவமனை   தீ  விபத்து    பற்றிப்  பேசத்   தொடங்கினார்.  ரோஸ்லான்   குறுக்கிட்டு  அவரை   அமரும்படி    சைகை   காட்ட   ராயர்   அவரை  நோக்கி  “kurang ajar”  என்று   கத்தினார்.

அதனை   அடுத்து   இருவருக்கும்  வாக்குவாதம்   முற்றியது.  லாவ்   குறுக்கிட்டு   அவர்களின்   கோமாளித்தனத்தை   நிறுத்துமாறு   உத்தரவிட்டார்.

“உங்கள்  இருவரையுமே  வெளியேறுமாறு    கூறுவேன்”,  என்று   எச்சரித்தார்.

இருவரும்   அடங்கினர்.  சட்டமன்ற   நடவடிக்கைகள்  தொடர்ந்தன.