சூரிய ஆற்றல் நிறுவனக் குழுமம் ஒன்றுடன் டிஎன்பி செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை புத்ரா ஜெயா வெளியிட வேண்டும். அத்திட்டத்தின் மதிப்பு, ஏன் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்ற விவரங்களும் வெலியிடப்பட வேண்டும்.
அக்குழுமத்தில் இடம்பெற்ற மூன்று நிறுவனங்களுக்கும் சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் துறையில் முன்அனுபவம் இருப்பதுபோல் தெரியவில்லை என்பதால் அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது ஏன் என்பது விளங்கவில்லை என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறினார்.
பங்குச் சந்தையில் டிஎன்பி செய்துள்ள பதிவின்படி Itramas Technology Sdn Bhd, Maltechpro Sdn Bhd, Cam-Lite Sdn Bhd ஆகிய மூன்றுமே அந்நிறுவனங்களாகும்.
Maltech Pro, இதுதான் 1மலேசியா கைக்கணினியை அறிமுகம் செய்த நிறுவனம், அதன் முக்கிய தொழில் “கைபேசி செயலிகள், கருவிகள், சாதனங்கள்” என்று நிறுவனப் பதிவு ஆணையப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது.
“Maltech Proவின் பங்குதாரர் விவரமும் பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் 35 விழுக்காடு பங்குரிமை வைத்துள்ள சொஹாய்மி ஷஹாடான் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்.
“20 விழுக்காடு பங்கு வைத்துள்ள அஹ்மட் ஜவ்ரி சுலைமான், ஷா ஆலமில் ஒரு அம்னோ தலைவர்.
“150MW சூரிய ஆற்றல் பண்ணை குத்தகை அந்தக் குழுமத்திடம் கொடுக்கப்பட்டதற்கு இது ஒரு காரணமா?”, என்று ஒங் வினவினார்.
Cam-Lite நிறுவனம் “மின்னியல் பொருள்கள் விற்பனை” செய்யும் நிறுவனம் என்றும் 2012 முடிய அதன் வருமானம் ரிம131,359 என்றும் அதில் ஆதாயம் ரிம1,397 என்றும் அந்நிறுவனம் பற்றிய பொது ஆவணங்கள் கூறுகின்றன.
Maltech Pro, Cam-Lite இரண்டுக்குமே வலைத்தளங்கள் இருப்பதுபோல் தெரியவில்லை என ஒங் கூறினார்.
மூன்றாவது நிறுவனமான Itramas Technology அதன் வலைத்தளத்தில் “அரசாங்கத்துக்காக உயர் பொறியியல் திட்டங்களையும் பசுமைத் தொழில்நுட்பத் திட்டங்களையும் அமல்படுத்திய அனுபவம், குறிப்பாக எல்இடி தொழில்நுட்பத்தில் ” அனுபவம் இருப்பதாகக் கூறியுள்ளது.
“ஆக, இந்நிறுவனங்களுக்கு (சூரிய ஆற்றல் மின் உற்பத்தித் துறையில்) அனுபவம் இல்லை என்கிறபோது இவர்களுக்கு ஏன் இந்தத் குத்தகை வழங்கப்பட்டது?
“இவை டிஎன்பியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மதிப்பு என்ன?”, என்று ஒங் வினவினார்.
இப்பத்தான் புரிகிறது நமது டிஎன்பி பில் 1 .6 % கட்டணம் வசூலிக்க படுகிறது .