கினிடிவிக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்து கைருடின் கேட்கிறார்: ஏஜி அபாண்டி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

 

Kairudinasksஅம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபு ஹசான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்ததை வீடியோவில் பதிவேற்றம் செய்திருந்ததற்காக கினிடிவி நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கைருடின்.

அச்செய்தியாளர் கூட்டத்தில் 1எம்டிபி விவகாரத்தை அபாண்டி கையாண்ட முறை குறித்து விமர்சனம் செய்த கைருடின் அவரை “தகுதியில்லாதவர்” (worthless)என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரினார்.

“அபாண்டி ஓர் அரசு அதிகாரி. அட்டர்னி-ஜெனரல் என்ற அவரது பதவி பொதுச்சேவையின் ஓர் அங்கம்.

“நான் அட்டர்னி-ஜெனரலை ‘தகுதியில்லாதவர்’ என்று கூறக்கூடது என்பது அரசமைப்புச் சட்டத்திலும் சட்டத்திலும் இருக்கிறதா? அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?

“நான் அவரை விமர்சிக்கவே முடியாது என்பது அதன் அர்த்தமா?” என்று கைருடின் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.

கினிடிவியில் பதிவேற்றம் செய்யப்பட்ட அக்குறிப்பிட்ட செய்தியாளர் கூட்டம் பற்றி தாமும் விசாரிக்கப்படுவதாக கைருடின் தெரிவித்தார்.

ஆனால், அவர் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக கைருடின் மேலும் கூறினார்.

தமது செய்தியாளர் கூட்டம் எப்படி தேசநிந்தனைக்குட்பட்டது என்பது புதிராக இருக்கிறது என்றாரவர்.