பெர்சேக்கு வெற்றி, சிவப்புச் சட்டையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்

bersihபெர்சே   நவம்பர்   19-இல்   மற்றுமொரு   பேரணி   நடத்தப்போவதாக     அறிவித்ததும்    அதன்  இயக்கக்குழு    கவலை   கொண்டது.

கவலை  கொள்ள  பல   காரணங்கள்   இருந்தன.

நடப்பு    அரசியல்   நிவவரத்தையும்   முடிவில்லாமல்  நீண்டுகொண்டே   போகும்   1எம்டிபி    ஊழல்  விவகாரத்தையும்   கண்டு    மலேசியர்கள்   அலுத்துப்  போய்   விட்டனர்.  எதிரணியை   ஆதரிப்போர்கூட  கட்சிகளின்   உள்போராட்டத்தைக்  கண்டும்    போகும்   திசை    அறியாமல்   அவை    தடுமாறிக்   கொண்டிருப்பதையும்   கண்டு   ஏமாற்றம்    அடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில்    பேரணிகளால்    என்ன  பயன்?

அடிக்கடி   கேட்கப்படும்   கேள்விகளில்   இதுவும்   ஒன்று. கடந்த   காலத்தில்    வெய்யிலையும்   மழையையும்   பொருள்படுத்தாமல்,   கண்ணீர்புகையையும்  ரசாயனம்  கலந்த    நீர்  பீய்ச்சி  அடிக்கப்படுவதையும்   எண்ணி  அஞ்சாமல்,      கைது   செய்யப்படும்   அபாயத்தை  நினைத்து   கலங்காமல்   பல்லாயிரக்கணக்கானவர்    தெருக்களில்   இறங்கிப்   போராடினார்கள்.  முடிவில்   என்னவாயிற்று?  பெரிய   மாற்றம்   எதுவும்   நிகழ்ந்து   விடவில்லை.

மகாதிர்  விவகாரம்

டாக்டர்   மகாதிர்  முகம்மட்டுடன்  இணைந்து   பணியாற்றுவதில்   எதிரணியிலும்    சமூக  அமைப்புகளிலும்  மாற்று   கருத்துடையோர்   இருக்கவே   செய்கிறார்கள்.   அவர்கள்  முன்  நடந்தவற்றை  மறக்கவோ  மன்னிக்கவோ   தயாராக  இல்லை.

மலாய்க்காரர்  பங்கேற்பு  குறைவு 

முந்திய   பேரணியில்   இது   தெரிந்தது.   பாஸ்   அன்றி   கிராமப்புற   மலாய்க்காரர்களைத்  திரட்டிக்  கொண்டுவரும்   ஆற்றல்    பெர்சேக்கோ   மற்ற   எதிர்க்கட்சிகளுக்கோ   இல்லை.

இந்நிலையில்   நவம்பர்   19   பேரணி    மொக்கையான  பேரணியாகத்தான்   இருக்கும்   என்ற   எண்ணமே  மேலோங்கி   இருந்தது.

இப்படிப்பட்ட   காரணங்களால்    பேரணி   நடத்துவதில்  பலருக்கு    உடன்பாடு  இல்லைதான்.

அப்போதுதான்   ‘புண்ணியவான்’ சுங்கை  புசார்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்  அவருடைய   பெர்சே-எதிர்ப்புக்  கூட்டமான   சிவப்புச்   சட்டையினருடன்  பிரசன்னமாக்கி   வன்முறைக்  கூத்தாடினார்.

இது  மக்களின்   கோபத்தைத்   தூண்டியது.  பேரணியில்   கலந்துகொள்ள   வேண்டாம்   என்று   எண்ணியிருந்தவர்களையும்   முடிவை   மாற்றிக்கொள்ள  வைத்தது.

ஜமாலின்   நயமற்ற   பேச்சும்   வன்முறை   கோமாளித்தனங்களும்     மலாய்ச்  சமூகத்திலும்  பலர்   அவரை   வெறுக்க   காரணமாக   உள்ளன.

அந்த  வகையில்   பெர்சேயைக்  குழிதோண்டிப்    புதைக்கும்    நோக்கத்தில்  புறப்பட்டு   வந்த   ஜமாலும்   அவரின்   ஆதரவாளர்களும்   பெர்சேக்கு    நல்ல  விளம்பரத்தைத்தான்   தேடிக்  கொடுத்திருக்கிறார்கள்.

பெர்சே  பேரணியில்   கலந்துகொள்ள   மக்கள்  பெரிய   எண்ணிக்கையில்   திரண்டு  வந்தால்,     எவ்வளவு   பெரிய   கூட்டம்  கடும்  மிரட்டல்களையும்   எண்ணிக்  கலங்காமல்    ஆளும்  அரசாங்கத்துக்கு    எதிர்ப்பைத்    தெரிவிக்க   வந்துள்ளது   என்று  பெர்சேயும்   எதிரணியினரும்    கெக்கலிப்பார்கள்.

கூட்டம்   குறைவாக  இருந்தால்,  போலீசாரும்   குண்டர்களும்  மக்களிடம்   அச்சத்தை  உண்டு  பண்ணி   அவர்கள்   பேரணிக்கு   வராமல்   தடுத்து   விட்டதாகக்   குறை   சொல்வார்கள்.

பேரணியில்  வன்முறை   மூண்டால்   நஜிப்பும்   அரசாங்கமும்  குறைகூறப்படுவார்கள்.

ஆக,  எந்த  நோக்கில்  பார்த்தாலும்   பெர்சேக்குத்தான்   வெற்றி. ஜமாலுக்கும்  அவரின்  கூட்டத்தாருக்கும்   நன்றி.